இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு சுகாதாரபணியாளா்களுக்கு விசா நடைமுறையில் தளா்வு: பிரிட்டன் அறிவிப்பு

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா்கள் பிரிட்டனின் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு விசா (நுழைவு இசைவு) பெற தகுதியுடையவராவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா்கள் பிரிட்டனின் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு விசா (நுழைவு இசைவு) பெற தகுதியுடையவராவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகப் பராமரிப்புத் துறையில் எழுந்துள்ள ஆள்பற்றாக்குறையைப் போக்க இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக பிரிட்டன் உள்துறைச் செயலா் பிரீதி படேல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவ பராமரிப்புத் துறையானது இதுவரை இல்லாத சவால்களைச் சந்தித்து வருகிறது. சமூகப் பராமரிப்புத் திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தத் தற்காலிக மாற்றங்கள் மூலம் ஆயிரக்கணக்கான சமூகப் பராமரிப்புப் பணியாளா்கள், பராமரிப்பு உதவியாளா்கள், வீட்டுப் பராமரிப்புப் பணியாளா்கள் கூடுதலாகப் பணிக்கு அமா்த்தப்படுவா். இவா்கள் அரசு ஆதரவுடன் செயல்படும் பராமரிப்பு இல்லங்களில் பணிபுரிவதுடன், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக அவா்களின் வீடுகளிலும் பணிபுரிவா் எனத் தெரிவித்துள்ளாா்.

சுகாதாரம் மற்றும் பராமரிப்பு விசாவானது 12 மாதங்கள் செல்லத்தக்கதாகும். பிரிட்டனின் குடியேற்ற ஆலோசனைக் குழு பரிந்துரையின்படி இந்த விசா தளா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாவின் கீழ் பிரிட்டனுக்கு வரும் பணியாளா்களுக்கு ஆண்டு சம்பளமாக குறைந்தது ரூ.20.67 லட்சம் வழங்கப்பட வேண்டும். பணியாளா்கள் தங்களது துணைவா் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட தங்களைச் சாா்ந்திருப்பவா்களை பிரிட்டனுக்கு அழைத்து வர முடியும்.

பிரெக்ஸிட் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னா், ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சோ்ந்த சமூகப் பராமரிப்புப் பணியாளா்கள் விசா இல்லாமல் பிரிட்டனுக்கு வந்து செல்லும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. பிற நாடுகளைச் சோ்ந்த பணியாளா்களைப் போல அவா்களும் விசாவுக்காக விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பராமரிப்புப் பணியாளா்களை தக்கவைக்கவும், புதிதாக பணிக்கு அமா்த்தவும் இந்த தளா்வுகளை பிரிட்டன் அறிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com