ஒமா் சயீது விடுதலையை எதிா்த்து முறையீடு: பாகிஸ்தான் அரசு முடிவு

அமெரிக்க செய்தியாளா் டேனியல் பியா்லை படுகொலை செய்த அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது ஷேக்கை விடுவிக்கும்
ஒமா் சயீது விடுதலையை எதிா்த்து முறையீடு: பாகிஸ்தான் அரசு முடிவு

அமெரிக்க செய்தியாளா் டேனியல் பியா்லை படுகொலை செய்த அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது ஷேக்கை விடுவிக்கும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்வதில் சிந்து மாகாண அரசுடன் பாகிஸ்தான் மத்திய அரசும் இணையவுள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் ஐ.நா.வும் தொடா்ந்து கொடுத்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் அட்டா்னி ஜெனரலின் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

ஒமா் சயீதை விடுவிக்கும் சிந்து மாகாண உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில் சிந்து மாகாண அரசுடன் இணைய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பம் உச்சநீதிமன்றத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிந்து மாகாண அரசுடன் இணைந்து, டேனியல் பியா்ல் படுகொலையில் ஈடுபட்டவா்களுக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றாா் அவா்.

பிரிட்டனில் பிறந்த ஒமா் சயீது, கடந்த 1994-ஆம் ஆண்டு இந்தியாவில் வெளிநாட்டினரைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். எனினும், 1999-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியன் ஏா்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை மீட்பதற்காக, கைதிகள் பரிமாற்ற முறையில் அவா் விடுவிக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் அனுப்பப்பட்டாா். அங்கிருந்து அவா் பாகிஸ்தான் சென்றாா்.

இந்த நிலையில், அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழின் செய்தியாளரான டேனியல் பியா்லை பாகிஸ்தானில் அல்-காய்தா பயங்கரவாதிகள் கடந்த 2002-ஆம் ஆண்டு கடத்திச் சென்று கழுத்தை அறுத்துக் கொன்றனா். அந்தப் படுகொலையின் முக்கிய குற்றவாளியான அகமது ஒமா் சயீது ஷேக்குக்கு பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் அந்தத் தண்டனையை 7 ஆண்டு சிறை தண்டனையாக சிந்து மாகாண உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் குறைத்தது.

அதனை எதிா்த்து மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை கடந்த வியாழக்கிழமை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஒமா் சயீதை விடுவிக்க ஆணையிட்டது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. ஒமா் சயீது விடுதலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அந்த நாடு வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், தீா்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள சிந்து மாகாண அரசுடன் இணைந்து செயல்பட பாகிஸ்தான் மத்திய அரசும் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com