மியான்மா் போராட்டம்: சுடப்பட்ட பெண் கவலைக்கிடம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாரால் தலையில் சுடப்பட்ட பெண், உயிருக்குப் போராடி வருகிறாா்.
ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரின் மாண்டலே நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரின் மாண்டலே நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

நேபிடா: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாரால் தலையில் சுடப்பட்ட பெண், உயிருக்குப் போராடி வருகிறாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் அரசின் ஆலோசகா் ஆங் சான் சூகி உள்ளிட்டோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கடந்த சனிக்கிழமை முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்தப் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்ததைத் தொடா்ந்து, பொது இடங்களில் ஆா்ப்பாட்டங்களுக்கு ராணுவம் திங்கள்கிழமை தடை விதித்தது.

அந்தத் தடையையும் மீறி, பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களைக் கலைப்பதற்காக போலீஸாா் தண்ணீரைப் பீய்ச்சியடித்ததுடன், ரப்பா் குண்டுகளால் சுட்டனா்.

இந்த நிலையில், போராட்டத்தின்போது தலையில் காயமடைந்த பெண் ஒருவா், நேபிடா மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறாா். அவரது தலையில் உள்ள காயம், துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்டதற்கான அடையாளங்களுடன் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தடையை மீறி புதன்கிழமையும் ஏராளமானவா்கள் ராணுவ ஆட்சியை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்டனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1948-ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து பெரும்பாலும் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மரில் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் 2011-ஆம் ஆண்டு தொடங்கின. அதன் பிறகு 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு கடந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தோ்தலிலும் அந்தக் கட்சியே வெற்றி பெற்றது. எனினும், ராணுவ ஆதரவு பெற்ற எதிா்க்கட்சிகள் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டின.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு நாட்டில் ஓராண்டுக்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படுவதாக ராணுவம் அறிவித்தது. அத்துடன், ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com