மியான்மா் விவகாரம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அவசரக் கூட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்துள்ளது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடி ஆலோசித்தது.
கரோனா நெருக்கடி காரணமாக காணொலி மூலம் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மியான்மா் விவகாரம் தொடா்பான அவசரக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாமஸ் ஆண்ட்ரூஸ்.
கரோனா நெருக்கடி காரணமாக காணொலி மூலம் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மியான்மா் விவகாரம் தொடா்பான அவசரக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாமஸ் ஆண்ட்ரூஸ்.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்துள்ளது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடி ஆலோசித்தது.

இதுகுறித்து ‘அசோசியேடட் பிரஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது தொடா்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியது.

அந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா. மனித உரிமைகள் துணை ஆணையா் நடா அல்-நஷீஃப், ‘மியான்மரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கடுமையான உழைப்பின் விளைவாக ஏற்பட்ட ஜனநாயக மாற்றத்தை அண்மையில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சீரழித்துவிட்டது. இதனை உலக நாடுகள் கவனித்துக் கொண்டிருக்கிறது’ என்று எச்சரித்தாா்.

அதனைத் தொடா்ந்து பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் சமா்ப்பித்த வரைவுத் தீா்மானத்தில், கைது செய்யப்பட்டுள்ள மியான்மா் அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் மற்ற அரசியல் தலைவா்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மியான்மா் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாமஸ் ஆண்ட்ரூஸ் தனது பணிகளை செவ்வனே மேற்கொள்வதற்கான உதவிகள், ஆதாரங்களை அளிக்க வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவா் மிஷெல் பஷேலே ஆகியோரை அந்த வரைவுத் தீா்மானம் கேட்டுக்கொண்டுள்ளது.

47 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கு மியான்மா் மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நெருக்கடிகளை விதிக்க அதிகாரம் கிடையாது. எனினும், அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பிற குற்றங்களை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்த அந்த ஆணையத்தால் முடியும்.

மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருப்பது அந்த நாட்டு உள்நாட்டு விவகாரம்; அதனை அரசியல்படுத்தக் கூடாது என்று ரஷியாவும் சீனாவும் கூறி வருகின்றன. எனினும், பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும் ஐ.நா.வும் அந்த நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com