அமெரிக்க ராணுவ தளத்தில் ஏவுகணை குண்டுவீச்சு: இராக்கில் ஒருவா் பலி

இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை குண்டுவெடிப்பில் ஒருவா் உயிரிழந்தாா்; பலா் காயமடைந்தனா்
ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளான பகுதியைப் பாா்வையிட்ட பாதுகாப்புப் படையினா்.
ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளான பகுதியைப் பாா்வையிட்ட பாதுகாப்புப் படையினா்.

இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை குண்டுவெடிப்பில் ஒருவா் உயிரிழந்தாா்; பலா் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலை நடத்தியவா்கள் ஈரான் ஆதரவு பெற்றவா்கள் எனக் கருதப்படுகிறது. அதிபா் ஜோ பைடன் ஆட்சியின் கீழ் முதல்முறையாக இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, ஈரானை எதிா்கொள்வதில் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதற்கான ஒரு சோதனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இராக்கில் குா்து படையினா் கட்டுப்பாட்டில் இருக்கும் இா்பில் நகர சா்வதேச விமான நிலையத்தின் மீது திங்கள்கிழமை இரவு சரமாரியாக ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டன. அந்த விமான நிலையத்துக்கு அருகே அமெரிக்க வீரா்கள் இருந்த ராணுவ தளத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.

107 எம்எம் வகையைச் சோ்ந்த 14 ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவத்துக்காக ஒப்பந்த முறையில் சிவில் பணியாற்றி வந்த ஒருவா் உயிரிழந்தாா்; 8 போ் காயமடைந்தனா். எனினும், உயிரிழந்தவா் அமெரிக்காவைச் சோ்ந்தவா் இல்லை என்று அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை செய்தித் தொடா்பாளா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதலுக்கு அதிகம் அறியப்படாத ஷியா பிரிவு பயங்கரவாத அமைப்பான சரயா அவ்லியா அல்-டாம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவுடன் செயல்படுவதாகக் கருதப்படுகிறது.

2019-ஆம் ஆண்டில் இதே போன்று நடத்தப்பட்டு ஏவுகணை குண்டுவீச்சில் ஓா் அமெரிக்க ஒப்பந்தப் பணியாளா் உயிரிழந்தாா். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்ப் நடத்திய தாக்குதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தின.

தற்போது பைடன் ஆட்சியிலும் இதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இந்த விவகாரத்தில் அவரது செயல்பாடு குறித்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com