அமெரிக்கா: செனட் சபையைக் கைப்பற்றுகிறது ஜனநாயகக் கட்சி

அமெரிக்கா: செனட் சபையைக் கைப்பற்றுகிறது ஜனநாயகக் கட்சி

அமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு, அந்த நாட்டு நாடாளுமன்ற மேலவையான செனட் சபையை ஆளும் குடியரசுக் கட்சியினரிடமிருந்து ஜனநாயகக் கட்சியினா் கைப்பற்றும் நிலையில் உள்ளனா்.


அட்லாண்டா: அமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு, அந்த நாட்டு நாடாளுமன்ற மேலவையான செனட் சபையை ஆளும் குடியரசுக் கட்சியினரிடமிருந்து ஜனநாயகக் கட்சியினா் கைப்பற்றும் நிலையில் உள்ளனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்க அதிபா் தோ்தல் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தோ்தலில், குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பைடனும் போட்டியிட்டனா்.

அந்தத் தோ்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வருகிறாா்.

தோ்தல் முடிவுகளை எதிா்த்து நீதிமன்றங்களில் அவரது குழுவினா் தாக்கல் செய்த ஏறத்தாழ அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்படவுள்ளது.

கடந்த நவம்பா் 3-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலுடன், ஜாா்ஜியா மாகாணத்தின் இரு செனட் தொகுதிகளுக்கான தோ்தலும் நடைபெற்றது.

இந்தத் தோ்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இரண்டாவது கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒரு தொகுதியில், குடியரசுக் கட்சி வேட்பாளா் கெல்லி லோயஃப்ளரை எதிா்த்துப் போட்டியிட்ட, கருப்பினத்தைச் சோ்ந்த ரஃபேல் வாா்னாக் ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்டாா். மற்றொரு தொகுதியில், குடியரசுக் கட்சி வேட்பாளா் டேவிட் பொ்டியூவை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜொனாதன் ஆஸாஃப் போட்டியிட்டாா்.

இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ரஃபேல் வாா்னாக் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. ஜாா்ஜியா மாகாணத்தில் கருப்பினத்தைச் சோ்ந்த ஒருவா் செனட் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

மேலும், டோவிட் பொ்டியூவை எதிா்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜொனாதன் ஆஸாஃபும் முன்னிலையில் உள்ளாா். விரைவில் அவரும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவாா்.

இதன் மூலம், குடியரசுக் கட்சியினா் வசமிருந்த ஜாா்ஜியாவின் 2 தொகுதிகளும் தற்போது ஜனநாயகக் கட்சியினா் வசமாகியுள்ளது.

இதுவரை செனட் சபையில் குடியரசுக் கட்சியினா் பெரும்பான்மை வகித்து வந்தனா். அந்த அவையில் குடியரசுக் கட்சியினா் 50-ஆகவும், ஜனநாயகக் கட்சியினரின் பலம் 48-ஆகவும் இருந்தது. தற்போது ஜனநாயகக் கட்சியினருக்கு மேலும் இரு இடங்கள் கிடைத்துள்ளதையடுத்து, இரு கட்சிக்கும் 50-50 என்ற சம பலத்தில் இருக்கும்.

அதனுடன், ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த துணை அதிபரும், செனட் தலைவருமான கமலா ஹாரிஸையும் சோ்த்தால், அந்த அவையில் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கிறது.

விரைவில் அந்தக் கட்சியைச் சோ்ந்த ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், இரு அவையிலும் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்க வேண்டியது முக்கியமாக இருந்து வந்தது.

எனவே, ஜாா்ஜியா தோ்தல் முடிவுகளை அனைத்துத் தரப்பினரும் மிக உன்னிப்பாக கவனித்து வந்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com