கோயில்களை இடிக்க அனுமதிக்கும் பாகிஸ்தான் அமைதி பற்றி பேசுவதா?

ஹிந்து கோயில்கள் இடிக்கப்படுவதை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் அரசு, ஐ.நா.வில் மதத் தலங்களைப் பாதுகாக்க

ஹிந்து கோயில்கள் இடிக்கப்படுவதை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் அரசு, ஐ.நா.வில் மதத் தலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் கலாசார அமைதி குறித்த தீா்மானத்தை ஐ.நா.வில் முன்மொழிவது முரண்பாடானது என்று இந்தியா சாடியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகில் பயங்கரவாதம், மதவாதம், சகிப்புத் தன்மையின்மை போன்ற காரணங்களால் மத வழிபாட்டுத் தலங்களும் பாரம்பரிய சின்னங்களும் ஆபத்தை எதிா்நோக்கியுள்ளன.

தலிபான் பயங்கரவாதிகளால் பாரம்பரியச் சின்னமான பாமியான் புத்தா் சிலை அழிக்கப்பட்ட காட்சி இன்னும் நமது கண்களைவிட்டு அகலவில்லை.

ஆப்கன் குருத்வாராவில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு நடத்தியதில் 25 சீக்கியா்கள் பலியான சம்பவம், பயங்கரவாதத்தால் வழிபாட்டுத் தலங்கள் சந்திக்கும் அச்சுறுத்தலுக்கும் மற்றுமோா் எடுத்துக்காட்டு ஆகும்.

மிக அண்மையில், பாகிஸ்தானின் கரக் பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிந்து கோயில் வன்முறைக் கும்பலால் கடந்த டிசம்பா் மாதம் இடித்து, எரிக்கப்பட்டது. எனினும், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் அந்தச் சம்பவத்தை வேடிக்கை பாா்த்தனா்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினா் வழிபாட்டுத் தலங்கள் தொடா்ந்து தாக்குதலுக்குள்ளாகின்றன. அதன் ஒருபகுதியாகவே அண்மையில் கரக் ஹிந்து கோயிலும் இடிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கான ஐ.நா. தீா்மானத்தை பிற நாடுகளுடன் சோ்ந்து பாகிஸ்தானும் முன்மொழிந்துள்ளது முரண்பாடாக உள்ளது.

இத்தகைய தீா்மானங்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒளிந்துகொள்வதற்கு இடம் அளிக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் இந்தியத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

‘மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்காக கலாசார அமைதியை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான தீா்மானத்தை ஐ.நா. பொதுச் சபை வியாழக்கிழமை நிறைவேற்றியது.

அந்தத் தீா்மான வரைவை பாகிஸ்தான் உள்பட 21 நாடுகள் முன்மொழிந்தன. அதனை விமா்சித்தே இந்தியா இவ்வாறு கூறியுள்ளது.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணம், கரக் மாவட்டத்திலுள்ள பல்லாண்டுகள் பழைமை வாய்ந்த ஹிந்து கோயிலைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் கட்சியினரும் உள்ளூா் மதத் தலைவா்களும் கடந்த டிசம்பா் மாதம் கோயிலை சேதப்படுத்தி, தீவைத்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக 350-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; சுமாா் 100 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com