
சமூக வலைதள நிறுவனங்களின் பயனர் தரவு பாதுகாப்பு குறித்து ஐ.நா. கவலை
சமூக வலைதள நிறுவனங்களின் பயனர் தரவு பாதுகாப்பு மேலாண்மை கவலை தரும் வகையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகள் பங்கேற்ற 2021ஆம் ஆண்டுக்கான முன்னுரிமை எனும் மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் பங்கு பெற்றார். அப்போது பேசிய அவர் உலகில் அதிவேக வளர்ச்சியடைந்து வரும் சமூக வலைதள நிறுவனங்களின் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்தார்.
சமூக வலைதள பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், அவற்றை பாதுகாக்கும் மேலாண்மை அமைப்பு, அரசியல்ரீதியாகப் பயன்படுத்தப்படும் தரவுகள் ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் தேவை என அவர் வலியுறுத்தினார்.
மேலும் “குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்கு அதிக அளவிலான வாய்ப்புகள் மற்றும் அதிகாரங்களை வழங்கும் சமூகத்தில் மக்கள் வாழ முடியாது” என அவர் தெரிவித்தார்.
மேலும் பயனர்களின் தரவுகளை அரசியல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக விற்பதன் மூலம் மக்களின் மனநிலையை மாற்ற நடக்கும் முயற்சிகள் குறித்து தீவிரமான விவாதம் அவசியம் என குடேரெஸ் தனது உரையில் தெரிவித்தார்.