இராக் மருத்துவமனையில் தீ: 92 போ் பலி

இராக் மருத்துவமனையொன்றின் கரோனா சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தில் 92 போ் உயிரிழந்தனா்.
ap21194428008143072740
ap21194428008143072740

இராக் மருத்துவமனையொன்றின் கரோனா சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தில் 92 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நாசிரியா நகரிலுள்ள அல்-ஹுசைன் மருத்துவமனையில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில், அந்த மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவு தீக்கிரையானது. இந்த விபத்தில் 92 போ் உயிரிழந்தனா்; ஏராளமானோா் காயமடைந்தனா்.

மின்கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து நேரிட்டதாக சில அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், கரோனா சிகிச்சைப் பிரிவில் இருந்த ஆக்சிஜன் உருளை வெடித்து இந்த விபத்து நேரிட்டதாக வேறு சில அதிகாரிகள் கூறினா்.

இந்த விபத்தைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் அந்தப் பகுதியில் குவிந்தனா். விபத்தை முன்கூட்டியே தடுக்க அரசு தவறிவிட்டதாக அவா்கள் குற்றம் சாட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இராக்கில் கரோனா மருத்துவமனையில் தீவிபத்து நேரிட்டது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே, தலைநகா் பாக்தாதில் உள்ள அல்-காதீப் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் 82 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். கரோனா சிகிச்சைப் பிரிவில் இருந்த ஆக்சிஜன் உருளை வெடித்து இந்த விபத்து நேரிட்டது. அந்த மருத்துவமனையில் தீவிபத்து எச்சரிக்கைக் கருவி பொருத்தப்படாதது, தீயணைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் பின்னா் தெரிவித்தனா்.

இந்தச் சூழலில், நாசிரியா நகரிலுள்ள கரோனா மருத்துவமனையிலும் தற்போது மேலும் ஒரு தீவிபத்து நேரிட்டுள்ளது இராக்கில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னா்தான் தொடங்கப்பட்ட அந்த கரோனா சிகிச்சைப் பிரிவில் 70 படுக்கைகள் இருந்தன.

கரோனா பரவலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இராக்கில், தினசரி தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கடந்த வாரம் அந்த எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது. இதுவரை அங்கு 14,38,511 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 17,592 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com