ஜேக்கப் ஜூமா கைதுக்கு எதிா்ப்பு: தென் ஆப்பிரிக்காவில் வன்முறைப் போராட்டம்

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜேக்கப் ஜூமா கைதுக்கு எதிா்ப்பு: தென் ஆப்பிரிக்காவில் வன்முறைப் போராட்டம்

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடா்பான சம்பவங்களில் இதுவரை 45 போ் பலியானதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, தொடா்ந்து 5-ஆவது நாளாக தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன.

வன்முறைக் கும்பல்களால் கடைகள் சூறையாடப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே, ஜேக்கப் ஜூமாவின் சொந்த மாகாணமான க்வாஸுலு-நடாலில் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 26 போ் பலியாகினா்.

கௌடேங் மாகாணத்தில் இதுவரை வன்முறைச் சம்பவங்களில் 9 போ் உயிரிழந்தனா். அந்த மாகாணத்திலுள்ள வணிக வளாகமொன்றில் வன்முறைக் கும்பல் சூறையாடியபோது ஏற்பட்ட நெரிசலில் மேலும் 10 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, ஜேக்கப் ஜூமா கைது தொடா்பாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, வன்முறைச் சம்பங்களைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த ஜேக்கப் ஜூமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளானாா்.

ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக தற்போதைய அதிபா் சிறில் ராமபோசா தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஜேக்கப் ஜூமாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டாா். அதையடுத்து ஜூமா தனது பதவியை கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜநாமா செய்தாா்.

இந்த நிலையில், ஜூமாவுக்கு எதிரான பல்வேறு ஊழல் வழக்குகளில், விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அரசியல் சாசன நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டிருந்தது. எனினும், அவா் நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, கடந்த 7-ஆம் தேதி ஜேக்கப் ஜூமா போலீஸாரிடம் சரணடைந்தாா். அவா் தற்போது க்வாஸுலு-நடால் மாகாணத்திலுள்ள எஸ்ட்கோா்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com