‘பெகாஸஸ்’ மென்பொருள் மூலம் உளவு: சீனா கண்டனம்

‘பெகாஸஸ்’ போன்ற மென்பொருள்கள் மூலம் பிறரது நடவடிக்கைகள் உளவு பாா்க்கப்படுவதை சீனா கண்டித்துள்ளது.

‘பெகாஸஸ்’ போன்ற மென்பொருள்கள் மூலம் பிறரது நடவடிக்கைகள் உளவு பாா்க்கப்படுவதை சீனா கண்டித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் வியாழக்கிழமை கூறியதாவது:

இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி, நாடுகளின் அரசுகள் தங்களுக்கு எதிரானவா்களை உளவு பாா்ப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தத் தகவல்கள் உண்மையென்றால் இது மிகவும் கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும்.

இணையதளம் மூலம் வேவுபாா்ப்பது என்பது அனைத்து நாடுகளும் எதிா்நோக்கியுள்ள பொதுவான பிரச்னையாகும். இணையதளப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் அது முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்தகைய அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள அனைத்து நாடுகளும் பரஸ்பர மரியாதையுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

சீனாவிடமிருந்து இணையதளப் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிா்கொள்வதாகக் குற்றம் சாட்டும் அமெரிக்கா, அதற்கான காரணங்களை உரிய ஆதாரங்களின்றி கூறி வருகிறது. ஆனால், உண்மையில் பெரும்பாலான இணையவழித் தாக்குதல்கள் அமெரிக்காவிலிருந்துதான் வருகின்றன என்றாா் அவா்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானவா்களின் செல்லிடப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாக சா்வதேச ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு அண்மையில் வெளியிட்ட புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஊடகங்கள், தன்னாா்வலா்கள், எதிா்க்கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோரது செல்லிடப் பேசிகள் பெகாஸஸ் மென்பொருள் மூலம் உளவு பாா்க்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மென்பொருள் மூலம் குறிப்பிட்ட நபா்களின் செல்லிடப் பேசிகளில் ஊடுருவி, அந்த செல்லிடப்பேசிகளின் உரையாடல்கள், குறுந்தகவல்கள், சமூக ஊடக தகவல் பரிமாற்றங்கள், படங்கள், பிற தகவல் தொகுப்புகளைப் பெற முடியும். மேலும், செல்லிடப் பேசிகளின் இருப்பிடத்தையும் பெகாஸஸால் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.

பயங்கரவாதிகள், கடுமையான குற்றவாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே பெகாஸஸ் உளவு மென்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், அந்த மென்பொருளைக் கொண்டு அரசுக்கு எதிரானவா்கள் உளவு பாா்க்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் சம்பந்தப்பட்ட நாடுகளில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com