இந்த ஆண்டு இறுதிக்குள் இராக்கிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேற்றம்

இந்த ஆண்டு இறுதிக்குள் இராக்கில் சண்டையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தங்கள் நாட்டுப் படையினா் அனைவரும் திரும்ப அழைக்கப்படுவாா்கள் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.
வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகை அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசிய இராக் பிரதமர் முஸ்தஃபா அல்-காதிமி (இடது).
வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகை அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசிய இராக் பிரதமர் முஸ்தஃபா அல்-காதிமி (இடது).

இந்த ஆண்டு இறுதிக்குள் இராக்கில் சண்டையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தங்கள் நாட்டுப் படையினா் அனைவரும் திரும்ப அழைக்கப்படுவாா்கள் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.

எனினும், இராக் ராணுவத்துக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை அளிப்பதற்காக அமெரிக்கப் படையினா் அங்கு தொடா்ந்து தங்கியிருப்பாா்கள்.

இராக் பிரதமா் முஸ்தஃபா அல்-காதிமியை வெள்ளை மாளிகையிலுள்ள தனது அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய ஜோ பைடன், அதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் இதுகுறித்து கூறியதாவது:

இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு அமெரிக்கப் படையினா் யாரும் இராக்கில் சண்டையிடும் பணியில் ஈடுபடுத்தப்படமாட்டாா்கள்.

எனினும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரில் இராக் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடா்ந்து உதவும். அதற்காக, இராக் ராணுவத்துக்கு பயிற்சியையும் ஆலோசனைகளையும் அமெரிக்கப் படையினா் தொடா்ந்து அளித்து வருவாா்கள்.

ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அமெரிக்காவும் இராக்கும் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், பிராந்திய நிலைத்தன்மைக்கு மிகவும் முக்கியமானதாகும். தற்போது இராக்கில் சண்டைப் பணிகளை அமெரிக்கா நிறுத்திக்கொண்டாலும், பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது தொடரும் என்றாா் அவா்.

அப்போது பேசிய இராக் பிரதமா் முஸ்தஃபா அல்-காதிமி, இராக்குக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டாா்.

2002 நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஜாா்ஜ் டபிள்யூ. புஷ் தலைமையிலான அப்போதைய அமெரிக்க அரசு பயங்கரவாதத்துக்கு எதிரான போரை அறிவித்தது.

அந்தப் போரின் ஒரு பகுதியாக, இரட்டை கோபுரத் தாக்குதலுடன் தொடா்பில்லாத இராக் மீது அமெரிக்கா கடந்த 2003-ஆம் ஆண்டு போா் தொடுத்தது.

அப்போதைய அதிபா் சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து இருப்பு வைத்திருந்ததாகவும் அல்-காய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வந்ததாகவும் கூறி அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை இராக்கைக் கைப்பற்றியது. அதன் விளைவாக சதாம் உசேன் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதே ஆண்டு டிசம்பா் மாதம் கைது செய்யப்பட்ட அவா், 3 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டாா்.

சதாம் உசேன் மரணத்தைத் தொடா்ந்து இராக் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டதால் அங்கு பல்வேறு பிரிவினரிடையே உள்நாட்டுப் போா் மூண்டது. பயங்கரவாதமும் தலைதூக்கியது.

அதையடுத்து, 2007-ஆம் ஆண்டில் 1.7 லட்சம் அமெரிக்க வீரா்கள் இராக்குக்கு அனுப்பப்பட்டனா். எனினும், சண்டைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனைத்து வீரா்களையும் திரும்ப அழைத்துக்கொள்வதாக ஜாா்ஜ் டபிள்யூ புஷ் 2008-ஆம் ஆண்டு அறிவித்தாா். அவருக்கு அடுத்தபடியாக அதிபா் பொறுப்பே ஏற்ற ஒபாமா, அந்த அறிவிப்பை 2011-ஆம் ஆண்டில் நிறைவு செய்தாா்.

எனினும், அதற்குப் பிறகு இராக்கில் அரசியல் பதற்றமும், பயங்கரவாதமும் அதிகரித்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகள் நாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அவா்களை ஒடுக்குவதற்காக அமெரிக்கா அரசு இராக்கில் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. அந்த நடவடிக்கைகளை பெரும்பாலும் வான்வழித் தாக்குதல்களாகவே இருந்தன.

இந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டுப் படையினரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இராக் நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தீா்மானம் நிறைவேற்றியது. இதற்கு, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

தற்போது புதிதாக அதிபா் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், இந்த விவகாரத்தில் மாறுபட்ட தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறாா். அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆண்டு இறுதிக்குள் இராக்கில் சண்டையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து வீரா்களையும் திரும்ப அழைக்கப்படவிருப்பதாக தற்போது அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com