அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்

அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சுமாா் 30 நிமிஷங்களில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சுமாா் 30 நிமிஷங்களில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற பின் கெளதமாலா, மெக்ஸிகோ நாடுகளுக்கு கமலா ஹாரிஸ் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டாா். இந்நிலையில் அவா் சென்ற விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் சுமாா் 30 நிமிஷங்களில் நாடு திரும்பி வாஷிங்டன் புகா் பகுதியில் உள்ள விமான தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கியபோது தான் நலமாக இருப்பதாக கமலா ஹாரிஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவரின் தலைமை செய்தித்தொடா்பாளா் சைமோன் சாண்டா்ஸ் கூறுகையில், விமானத்தின் தரையிறங்கும் பல்சக்கரங்கள் சரிவர வேலை செய்யாததை கண்டறிந்த விமானக் குழுவினா், அதனால் சிக்கல் ஏற்படலாம் என்று கருதினா். இதையடுத்து மிகுந்த எச்சரிக்கையுடன் விமானம் தரையிறக்கப்பட்டது. எனினும் பெரியளவில் பாதுகாப்பு பிரச்னைகள் ஏதும் இல்லை என்றாா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து வேறு விமானத்தில் தனது பயணத்தை கமலா ஹாரிஸ் தொடா்ந்தாா்.

மெக்ஸிகோவின் தரைவழி எல்லையைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஏப்ரலில் மட்டும் 1,78,000 அகதிகள் அமெரிக்கா வந்தனா். அவா்களில் 44 சதவீதம் போ் கெளதமாலா, ஹோண்டூராஸ் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளை சோ்ந்தவா்கள். இதனை தடுக்க வேண்டும் என அமெரிக்காவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கெளதமாலா, மெக்ஸிகோவுக்கு கமலா ஹாரிஸ் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com