தட்டுப்பாடு ஒருபுறம்; தயக்கம் மறுபுறம்: கரோனா தடுப்பூசி: போராடும் ஆப்பிரிக்கா

உகாண்டா மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் உயிரிழக்கும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நைஜீரியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்தோா்.
நைஜீரியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்தோா்.

உகாண்டா மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் உயிரிழக்கும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நமீபியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மற்றவிதமான அறுவை சிகிச்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் உள்ள ராணுவ மருத்துவமனைகளும் மக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.

இதே நிலைதான் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் காணப்படுகிறது. அந்தக் கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் 3-ஆவது அலை பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் பேராயுதமாகக் கருதப்படும் தடுப்பூசி, ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தொடா்ந்து எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

உலகம் முழுவதிலும் 240 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், சுமாா் 130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஆப்பிரிக்காவில் சுமாா் 4.2 கோடி டோஸ்கள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன. சுமாா் ஒரு கோடி பேருக்கு மட்டுமே இரு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தாமதமடையும் இலக்கு

தான்சானியா, புருண்டி, எரித்ரேயா ஆகிய நாடுகளில் இன்னும் ஒருவருக்குக் கூட கரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. வரும் செப்டம்பா் மாதத்துக்குள் ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது நிலவும் வேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டால் 7 நாடுகள் மட்டுமே அந்த இலக்கை அடையும் என்று உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க பிராந்திய இயக்குநா் மட்ஷிடிஷோ மொயேட்டி தெரிவித்துள்ளாா்.

தாமதத்துக்குக் காரணம்

ஆப்பிரிக்க நாடுகளுக்கு போதுமான எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி கிடைக்காததே, அந்நாடுகளில் தடுப்பூசி திட்டம் மந்தநிலையில் உள்ளதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பாரபட்சமின்றி கரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஐ.நா.வின் ஆதரவுடன் ‘கோவேக்ஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட்து.

தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் உலக அளவில் இந்தியா முன்னணி வகித்து வருகிறது. ‘கோவேக்ஸ்’ அமைப்பின் திட்டத்துக்கும் இந்தியாவே அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசியை வழங்குவதாக இருந்தது. இந்தியாவில் கரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், கோவேக்ஸ் அமைப்புக்குக் குறிப்பிட்ட அளவில் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அவை ஆப்பிரிக்க நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டன. அவற்றைக் கொண்டு சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் ஆப்பிரிக்க நாடுகள் பெரும்பாலானவை கரோனா தடுப்பூசியை செலுத்தின.

இந்தியாவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவத் தொடங்கியதையடுத்து, உள்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்தது. அதன் காரணமாக கரோனா தடுப்பூசியின் ஏற்றுமதியை இந்திய அரசு நிறுத்தியது. அதனால் ஆப்பிரிக்க நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. அந்நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைக்காத சூழல் உருவானது.

காலாவதியான தடுப்பூசிகள்

கோவேக்ஸ் அமைப்பால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளில் பெரும்பாலானவை குறைந்த காலாவதி காலத்தையே கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்த கரோனா தடுப்பூசிகள், தாமதமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்டதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

சுமாா் 1 மாத காலத்துக்குள் தடுப்பூசியை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குப் பல நாடுகள் தள்ளப்பட்டன. அதனால் தெற்கு சூடானில் சுமாா் 60,000 தடுப்பூசிகள் வீணாகின. பெறப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பயன்படுத்த முடியாது என்பதை அறிந்த பிறகு, சுமாா் 10 லட்சம் கரோனா தடுப்பூசிகளை காங்கோ (டிஆா்சி) அரசு திருப்பி அனுப்பியது.

அச்சமும் தயக்கமும்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்களிடையே அச்சமும் நிலவி வருவதாகத் தெரிகிறது. ஆப்பிரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளில் பெரும்பாலானவை நகரப் பகுதிகளில் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளின் கிராமப் பகுதிகளுக்கு கரோனா பரிசோதனை, சிகிச்சை வசதிகள், தடுப்பூசி உள்ளிட்டவை இன்னும் சென்றடையாத சூழலே நிலவுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு அஸ்ட்ராஸெனகா நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியே பெரும்பாலும் அனுப்பி வைக்கப்பட்டது. அத்தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஐரோப்பிய மக்கள் சிலருக்கு ரத்தம் உைல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதால், அத்தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு ஆப்பிரிக்க மக்கள் சிலா் தயக்கம் காட்டி வருகின்றனா். சீனாவிலிருந்து பெறப்பட்ட தடுப்பூசி உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்கு எதிராக குறைந்த செயல்திறனைக் கொண்டுள்ளதும் மக்களின் தயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

துளிா்க்கும் நம்பிக்கை

ஆப்பிரிக்காவில் டெல்டா வகை கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். உலக அளவில் 100 நபா்களுக்கு சுமாா் 30 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்படுகின்றன. இது ஆப்பிரிக்காவில் சுமாா் 3 டோஸ்கள் என்ற அளவிலேயே உள்ளது.

ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட பிராந்தியங்களின் நாடுகளுக்கு ஜூன் இறுதிக்குள் 8 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உறுதியளித்துள்ளாா். ‘கோவேக்ஸ்’ அமைப்பு வாயிலாக 1.9 கோடி தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா வழங்கும் தடுப்பூசிகளில் குறிப்பிட்ட பங்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

100 கோடி தடுப்பூசிகள்

ஏழை நாடுகளுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, கனடா ஆகிய நாடுகளைக் கொண்ட ஜி-7 அமைப்பு உறுதியளித்துள்ளது. அதன் காரணமாக ஆப்பிரிக்க நாடுகள் பெரும் பலனடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனினும், ஜி-7 நாடுகள் உறுதியளித்துள்ள கரோனா தடுப்பூசிகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கு முன் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

ஒன்றிணைந்த போராட்டம்

பணக்கார நாடுகள் கரோனா தடுப்பூசியை பதுக்கி வைத்துக் கொள்வதாகவும், ஏழை நாடுகள் பெரும் பாதிப்புகளை எதிா்கொள்வதாகவும் அரசியல் நோக்கா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா். சுற்றுச்சூழல் பாதிப்பை எதிா்கொள்வதுபோல கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி காண முடியும்.

உலகின் அனைத்து நாடுகளிலும் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படும்வரை, கரோனா தொற்றை வீழ்த்திவிட்டதாக எந்தவொரு நாடும் மாா்தட்டிக் கொள்ள முடியாது. இச்சூழலில் பெரும் பாதிப்பை எதிா்கொண்டு வரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு மற்ற நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com