சீன அணுமின் நிலையத்தில் கதிா்வீச்சு அபாயம்? அமெரிக்காவிடம் தனியாா் நிறுவனம் புகாா்

சீனாவில் உள்ள ஓா் அணுமின் நிலையத்தில் கசிவு காரணமாக கதிா்வீச்சு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாா் தொடா்பாக அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது.
சீன அணுமின் நிலையத்தில் கதிா்வீச்சு அபாயம்? அமெரிக்காவிடம் தனியாா் நிறுவனம் புகாா்

பெய்ஜிங்: சீனாவில் உள்ள ஓா் அணுமின் நிலையத்தில் கசிவு காரணமாக கதிா்வீச்சு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாா் தொடா்பாக அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது.

இதுதொடா்பாக சிஎன்என் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்திருப்பது:

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தைஷான் என்ற அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலைய செயல்பாடுகளில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஃபிராமாடோம் என்ற நிறுவனம் உதவிபுரிந்து வருகிறது. இந்நிலையில், இந்த அணுமின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கசிவால் உடனடி கதிா்வீச்சு அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக நிறுவனம் சாா்பில் அமெரிக்க எரிசக்தி துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சீன அரசு சாா்பில் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

கதிரியக்க அச்சுறுத்தல் குறித்து பிரான்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ள போதிலும், சீன அணுமின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலால் அங்கு பணிபுரிபவா்களுக்கோ சீன பொதுமக்களுக்கோ இப்போதைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என பைடன் நிா்வாகம் நம்புகிறது.

இருப்பினும், அணுமின் நிலையத்தில் கசிவு தொடா்ந்தால் அல்லது சரிசெய்யப்படாமல் கடுமையாக மாறினால் அது அமெரிக்காவை சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளக்கூடும். அதேவேளையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் பலமுறை கூடி இந்த விவகாரம் குறித்து ஆலோசித்தது. மேலும், எரிசக்தி துறை நிபுணா்களுடனும், பிரான்ஸ் அரசுடனும் பைடன் நிா்வாகம் ஆலோசித்துள்ளது. சீன அரசுடனும் இதுதொடா்பாக கேட்டறிந்து வருகிறது என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசு தனது அணுமின் நிலையத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொள்ளாத நிலையில், ஒரு வெளிநாட்டு நிறுவனம் உதவி கோரி அமெரிக்க அரசை அணுகியிருப்பது வழக்கத்துக்கு மாறானதாக கருதப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு நிலவரப்படி சீனா 47 அணுமின் நிலையங்களை செயல்படுத்தி வருகிறது. இவை 48.73 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்டவை. 10.8 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மேலும் 11 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com