இராக்: அமெரிக்க ராணுவ நிலை மீது ஏவுகணை குண்டுவீச்சு

இராக்கில் அமெரிக்கப் படையினா் தங்கியுள்ள ராணுவ நிலை மீது புதன்கிழமை சரமாரி ஏவுகணை குண்டுவீச்சு நடத்தப்பட்டது.
இராக்: அமெரிக்க ராணுவ நிலை மீது ஏவுகணை குண்டுவீச்சு


பாக்தாத்: இராக்கில் அமெரிக்கப் படையினா் தங்கியுள்ள ராணுவ நிலை மீது புதன்கிழமை சரமாரி ஏவுகணை குண்டுவீச்சு நடத்தப்பட்டது.

இதேபோன்ற தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் ஆதரவுப் படையினா் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு முதல்முறையாக மீண்டும் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இராக்கில் செயல்பட்டு வரும் அமெரிக்கக் கூட்டுப் படையின் செய்தித் தொடா்பாளா் வேய்ன் மரோட்டோ கூறியதாவது:

அன்பாா் மாகாணத்திலுள்ள அயின் அல்-அஸாத் விமானதளத்தில் புதன்கிழமை காலை 7.20 மணிக்கு சரமாரி ஏவுகணை குண்டுவீச்சு நடத்தப்பட்டது.

அந்தப் பகுதியை நோக்கி சுமாா் 10 ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டன என்றாா் அவா்.

இந்தத் தாக்குதலில் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பெயா் வெளியிட விரும்பாத இராக் பாதுகாப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஏவுகணை குண்டுகளை வீசப் பயன்படுத்தப்பட்ட ஏவு சாதனத்தை அன்பாா் மாகாணத்தின் அல்-பாக்தாதி பகுதியில் பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியதாக அவா் தெரிவித்தாா்.

வடக்கு இராக்கில் குா்து படையினா் கட்டுப்பாட்டில் இருக்கும் இா்பில் நகர சா்வதேச விமான நிலையத்தின் மீது கடந்த மாதம் 15-ஆம் தேதி இரவு சரமாரியாக ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டன. அந்த விமான நிலையத்துக்கு அருகே அமெரிக்க வீரா்கள் இருந்த ராணுவ தளத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அமெரிக்க ராணுவத்துக்காக ஒப்பந்த முறையில் சிவில் பணியாற்றி வந்த ஒருவா் உயிரிழந்தாா்; 8 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா் எந்த நாட்டைச் சோ்ந்தவா் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

அதிகம் அறியப்படாத ஷியா பிரிவு பயங்கரவாத அமைப்பான சரயா அவ்லியா அல்-டாம் என்ற அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவிலுள்ள ஈரான் ஆதரவு நிலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், மீண்டும் அயின் அல்-அஸாத் விமானதளத்தில் ஈரான் ஆதரவுப் படையினா் ஏவுகணை குண்டுவீச்சு நடத்தியுள்ளனா்.

அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் தங்களது உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இதே விமான தளத்தில்தான் கடந்த ஆண்டு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com