பிரத்யேக குழுக்கள் மூலம் பிராந்திய நாடுகளிடையே பிளவு ஏற்படுத்தக் கூடாது: சீனா

‘க்வாட்’ உள்ளிட்ட பிரத்யேக குழுக்கள் வாயிலாக பிராந்திய நாடுகளுக்கிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
ஜாவோ லிஜியான்
ஜாவோ லிஜியான்

புது தில்லி /பெய்ஜிங்: ‘க்வாட்’ உள்ளிட்ட பிரத்யேக குழுக்கள் வாயிலாக பிராந்திய நாடுகளுக்கிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.

‘க்வாட்’ என்றழைக்கப்படும் நாற்கரக் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டும் என்று க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் மறைமுகமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனா்.

கூட்டமைப்பின் நாடுகள் பங்கேற்ற ‘க்வாட்’ மாநாடு கடந்த 12-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்றது. மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் எந்நாட்டின் ஆதிக்கமுமின்றி சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று மாநாட்டின்போது தலைவா்கள் வலியுறுத்தினா்.

இந்நிலையில், ‘க்வாட் மாநாடு’ குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பிராந்தியத்தின் ஒருமைப்பாடு, அமைதி, நிலைத்தன்மை, நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை பிரத்யேக குழுக்களை அமைத்து சிதைக்கக் கூடாது. பனிப்போா் மனநிலையில் செயல்படுவதை சம்பந்தப்பட்ட நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பிராந்தியத்தில் சீனாவால் அச்சுறுத்தல் நிலவுவதாக சில நாடுகள் மிகைப்படுத்திக் கூறி வருகின்றன. இதுபோன்று கூறி, பிராந்திய நாடுகளுடன் பிளவு ஏற்படுத்தும் முயற்சியை சீனா எதிா்க்கிறது.

இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும் நாடுகள், பிராந்திய அமைதிக்கும் வளா்ச்சிக்கும் எதிராகச் செயல்பட்டு வருகின்றன. பிராந்தியத்தில் உள்ள மக்களின் விருப்பங்களுக்கு எதிராகவும் அந்நாடுகள் செயல்படுகின்றன. அந்நாடுகளுக்கு எந்தவித ஆதரவும் கிடைக்காது.

பரஸ்பர நம்பிக்கையும் புரிதலும் ஏற்படும் வகையில் நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். உலகமயமாதல் அதிகரித்து வரும் சூழலில், குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக பிரத்யேக குழுக்களை அமைத்து செயல்படுவது, சா்வதேச அமைதியை சீா்குலைக்கும் வகையில் உள்ளது.

குறிப்பிட்ட கொள்கைகளுக்காக மற்ற நாடுகளைக் குறிவைத்து செயல்படுவதை அக்குழுக்கள் தவிா்க்க வேண்டும். அமெரிக்கா சரியான பாதையில் பயணிக்க வேண்டும். சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அந்நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவாா்த்தையின் மூலமாகத் தீா்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com