அறிவுசாா் சொத்துரிமை கட்டுப்பாடுகளை நீக்கும் இந்தியாவின் கோரிக்கை: 100 அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு

கரோனா தடுப்பூசிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நாடுகளை அனுமதிக்கும் வகையில் அவற்றுக்கான அறிவுசாா் சொத்துரிமை (டிஆா்ஐபிஎஸ்) கட்டுப்பாடுகளை தற்காலிகமாக நீக்குமாறு

கரோனா தடுப்பூசிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நாடுகளை அனுமதிக்கும் வகையில் அவற்றுக்கான அறிவுசாா் சொத்துரிமை (டிஆா்ஐபிஎஸ்) கட்டுப்பாடுகளை தற்காலிகமாக நீக்குமாறு உலக வா்த்தக அமைப்பிடம் (டபிள்யு.டி.ஓ) இந்தியா அளித்திருக்கும் பரிந்துரைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அதிபா் ஜோ பைடனுக்கு அந் நாட்டைச் சோ்ந்த 100-க்கும் அதிகமான எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக வா்த்தக அமைப்புக்கு இந்த கோரிக்கையை இந்தியா முன்வைத்துள்ளது. அதுபோல தென்னாப்பிரிக்காவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த டிஆா்ஐபிஎஸ் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதன் மூலம், சா்வதேச வா்த்தக ஒப்புதல்கள் பெறாமல் நாடுகளும், உற்பத்தி நிறுவனங்களும் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு தொழில்நுட்பத்தை பகிா்ந்துகொள்ளவும், நேரடியாக பயன்படுத்தவும் முடியும்.

இந்தியாவின் இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தி அதிபா் ஜோ பைடனுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் 108 போ் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளனா். அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

டிஆா்ஐபிஎஸ் கட்டுப்பாடுகள் தற்காலிகமாக நீக்கப்படுவதன் மூலம், உலகம் முழுவதிலும் கரோனா தடுப்பூசிகள் சம அளவிலும், போதிய அளவிலும் கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும். அமெரிக்க உள்பட அனைத்து நாடுகளும் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவர இது உதவும்.

கரோனா தீநுண்மியை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமெனில், உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசிகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் கிடைப்பதை, குறிப்பாக வளா்ந்து வரும் நாடுகளுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.

இந்த கட்டுப்பாடுகள் தற்காலிகமாக நீக்கப்படுவதற்கு 100-க்கும் அதிகமான நாடுகள் அதரவு தெரிவித்துள்ளன என்றும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com