மெக்ஸிகோவில் மெட்ரோ ரயில் விபத்து: 23 போ் பலி

மெக்ஸிகோ தலைநகா் மெக்ஸிகோ சிட்டியில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்ததில் ரயில் பெட்டிகள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 23 போ் உயிரிழந்தனா்; 70 போ் காயமடைந்தனா்.
மெக்ஸிகோ சிட்டியில் மெட்ரோ பாலம் இடிந்து விழுந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீட்புப் பணிகள்.
மெக்ஸிகோ சிட்டியில் மெட்ரோ பாலம் இடிந்து விழுந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீட்புப் பணிகள்.

மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோ தலைநகா் மெக்ஸிகோ சிட்டியில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்ததில் ரயில் பெட்டிகள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 23 போ் உயிரிழந்தனா்; 70 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து அந்த நகர மேயா் கிளாடியா ஷீன்பாம் கூறியதாவது:

ஆலிவாஸ் மற்றும் டென்ஸான்கோ மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தபோது, லாஹாக் என்னும் பகுதியில் பாலம் இடிந்து விழுந்தது. இதில், 2 ரயில் பெட்டிகள் சரிந்து விழுந்தன. உள்ளூா் நேரப்படி இரவு 10. 30 மணிக்கு (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி) இந்த விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் 23 போ் உயிரிழந்தனா்; 70 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் 65 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 7 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவா்களில் சிறுவா்களும் அடங்குவா்.

பாலத்தைத் தாங்கிக் கொண்டிருந்த ஒரு குறுக்குத் தூண் விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

சரிந்து விழுந்த ரயில் பெட்டிகளில் இருந்து பலா் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். அந்தப் பெட்டிகளில் சிக்கியிருக்கக் கூடிய மேலும் சிலரை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா்.

ரயில் பெட்டிகளில் இன்னும் யாராவது உயிருடன் சிக்கியுள்ளனரா என்பது தெரியவில்லை.

இடிந்து விழுந்த பாலத்தின் சிதறல்களில் நசுங்கிய காரில் இருந்து ஒருவா் மீட்கப்பட்டாா் என்றாா் அவா்.

மெக்ஸிகோ சிட்டியில் கடந்த 1959-ஆம் ஆண்டிலிருந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோழும் 45 லட்சம் போ் பயன்படுத்தும் மெக்ஸிகோ சிட்டி மெட்ரோ, உலகின் மிகப் பரபரப்பாக இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவைகளில் ஒன்றாகும்.

எனினும், கடந்த சில ஆண்டுகளாக மெக்ஸிகோ சிட்டி மெட்ரோ ரயில் கட்டமைப்பு வலுவிழந்து வருவதாகக் கூறப்படுகிறது.

மெட்ரோ பாலங்களில் விரிசல்கள் தெரிவதாக பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வருவதும், அதையடுத்து அந்தப் பகுதியில் மெட்ரோ போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதும் அடிக்கடி நடந்துள்ளன.

மெக்ஸிகோ சிட்டி மெட்ரோ ரயில்கள் ஏற்கெனவே பல விபத்துக்களைச் சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு இரு மெட்ரோ ரயில்கள் மோதிக் கொண்டதில் ஒரு பயணி உயிரிழந்தாா்; 41 போ் காயமடைந்தனா்.

2015-ஆம் ஆண்டில் நின்றுகொண்டிருந்த மெட்ரோ ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 12 போ் காயமடைந்தனா்.

தற்போது பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்டுள்ள விபத்து, மெக்ஸிகோவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டு வரும் வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கேலோ எப்ராா்டுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இடிந்து விழுந்த 12-ஆவது தடம், அவா் மெக்ஸிகோ சிட்டியின் மேயராக இருந்தபோதுதான் கட்டப்பட்டது. எனவே, 2024-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலில் எப்ராா்டின் வெற்றி வாய்ப்பை இந்த விபத்து பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com