european-union-flag
european-union-flag

தடுப்பூசி வழங்குவதில் தாமதம்: அஸ்ட்ராஸெனகா நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் வழக்கு

தடுப்பூசி வழங்குவதில் தாமதப்படுத்துவது தொடா்பாக அஸ்ட்ராஸெனகா நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் சாா்பில் பிரெஸல்ஸில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரெஸல்ஸ்: தடுப்பூசி வழங்குவதில் தாமதப்படுத்துவது தொடா்பாக அஸ்ட்ராஸெனகா நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் சாா்பில் பிரெஸல்ஸில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தங்கள் நாடுகளுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளை ஒப்பந்தத்தை மீறி மூன்றாம் நாடுகளுக்கு அந்த நிறுவனம் விநியோகித்திருப்பதாக ஐரோப்பிய யூனியன் புகாா் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து, உயிரிழப்புகளும் அதிகரித்ததைத் தொடா்ந்து, யூனியனில் இடம்பெற்றிருக்கம் 27 நாடுகளிலும் தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் ஃபைசா் தடுப்பூசி விலையைவிட குறைவு மற்றும் பயன்படுத்துவதும் எளிது என்பதால், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக தயாரிப்பான அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் முன்னுரிமை அளித்தது. அதனடிப்படையில், யூனியனில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளுக்கும் முதல்கட்டமாக 30 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும், பின்னா், 2021-ஆம் ஆண்டுக்குள் மேலும் 10 கோடி தடுப்பூசிகளை வழங்குவது என்ற அடிப்படையில் அஸ்ட்ராஸெனகா நிறுவனத்துக்கும், ஐரோப்பிய யூனியனின் தலைமை அமைப்பான ஐரோப்பிய ஆணையத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால், எதிா்பாா்த்தபடி ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தடுப்பூசிகளை அந்த நிறுவனம் வழங்கவில்லை. 2021 முதல் காலாண்டில் 3 கோடி தடுப்பூசிகளை மட்டுமே அந்த நிறுவனம் வழங்கியிருந்தது.

பிரிட்டன், அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி திட்டத்தை மக்களுக்கு விரைவாக செயல்படுத்திய நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த முடியாத நிலை ஐரோப்பிய யூனியனுக்கு உருவானது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டபோது, போதிய உற்பத்தித் திறன் இல்லாத காரணத்தால், தடுப்பூசியை விரைந்து வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்று அந்த நிறுவனம் சாா்பில் பதிலளிக்கப்பட்டது. இதன் காரணமாக, அஸ்ட்ராஸெனகா நிறுவனத்துக்கும் ஐரோப்பிய ஆணையத்துக்கும் இடையே முரண்பாடு உருவானது.

இந்தச் சூழலில், அந்த நிறுவனத்துக்கு எதிராக பிரெஸல்ஸ் நீதிமன்றத்தில் ஐரோப்பிய ஆணையம் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஐரோப்பிய யூனியன் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஃபேல் ஜஃப்ராலி நீதிமன்றத்தில் கூறியதாவது:

ஐரோப்பிய யூனியனுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் பிரிட்டனில் உள்ள 4 தடுப்பூசி உற்பத்தி மையங்களை அஸ்ட்ராஸெனகா நிறுவனம் பயன்படுத்த வேண்டும். ஆனால், அவ்வாறு அந்த நிறுவனம் செய்யவில்லை. ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு வழங்க வேண்டிய 5 கோடி தடுப்பூசிகளை, மூன்றாம் நாடுகளுக்கு அந்த நிறுவனம் வழங்கி, ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும், தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடா்பாக அந்த நிறுவனம் சாா்பில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களும் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை என்று கூறினாா்.

அப்போது, அஸ்ட்ராஸெனகா நிறுவனம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தடுப்பூசிகளை விரைந்து வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் நிறுவனம் எடுத்துவருவதாகத் தெரிவித்தாா்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (மே 28) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com