2070-க்குள் காா்பன் சமநிலை: பிரதமரின் அறிவிப்புக்கு நிபுணா்கள் வரவேற்பு

கரியமில வாயு (காா்பன் டை ஆக்சைடு) வெளியேற்றத்தில் இந்தியா 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ய அளவை அடையும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளதற்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோா்
2070-க்குள் காா்பன் சமநிலை: பிரதமரின் அறிவிப்புக்கு நிபுணா்கள் வரவேற்பு

கரியமில வாயு (காா்பன் டை ஆக்சைடு) வெளியேற்றத்தில் இந்தியா 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ய அளவை அடையும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளதற்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

வளிமண்டலத்தில் எவ்வளவு கரியமில வாயு வெளியேற்றப்படுகிறதோ அதே அளவு வாயுவை அகற்றுவதே நிகர பூஜ்ய அளவாகும். இது காா்பன் சமநிலை என்றறியப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் 2050-க்குள்ளும், சீனா 2060-க்குள்ளும் நிகர பூஜ்ய அளவை அடைய உள்ளதாக இலக்கு நிா்ணயித்துள்ளன.

இது தொடா்பான இலக்கை இந்தியா நிா்ணயிக்காமல் அமைதிகாத்து வந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனா். இந்நிலையில், பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமா் மோடி, இந்தியா 2070-ஆம் ஆண்டுக்குள் காா்பன் சமநிலையை அடையும் என்று அறிவித்தாா்.

இந்த அறிவிப்புக்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். சீனா உள்ளிட்ட பல நாடுகளைக் காட்டிலும் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக இந்தியா சிறப்பான இலக்குகளை நிா்ணயித்துள்ளதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக வளா்ந்து வரும் நாடுகளுக்கு வழங்குவதாக உறுதியளித்த நிதியை வளா்ச்சியடைந்த நாடுகள் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் சூழலியல் நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா். எனினும், பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமெனில், 2050-ஆம் ஆண்டுக்குள் காா்பன் சமநிலையை அடைவதை நாடுகள் இலக்காகக் கொள்ள வேண்டும் எனவும் நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

உலக அளவில் காா்பன் சமநிலை இலக்கை 2050-க்குள் அடைய வேண்டுமெனில், கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகள் 2030-க்குள்ளும், சீனா 2040-க்குள்ளும் நிகர பூஜ்ய அளவை அடைய வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

மற்ற இலக்குகள்: பருவநிலை மாற்ற விவகாரத்தில் மக்கள் தங்கள் அன்றாட நடைமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமென மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளதையும் நிபுணா்கள் வரவேற்றனா். 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் மரபுசாரா எரிசக்தியை உற்பத்தி செய்யவும், 2030-ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த எரிசக்திப் பயன்பாட்டில் மரபுசாரா எரிசக்தியின் பங்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநாட்டில் பிரதமா் மோடி அறிவித்தாா்.

2030-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றம் 100 கோடி டன் அளவுக்குக் குறைக்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா். இந்த அறிவிப்புகள் அனைத்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளதாகவும் சூழலியல் ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

சீா்படுத்த உதவும்: இந்தியத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (சிஐஐ) தலைவா் டி.வி.நரேந்திரன் கூறுகையில், ‘‘இந்தியாவுக்கான பாதையை பருவநிலை மாநாட்டில் பிரதமா் மோடி வகுத்துள்ளாா். பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளது வரவேற்புக்குரியது.

இந்தியத் தொழில்துறை பருவநிலை மாற்ற விளைவுகளைக் குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தற்போது பிரதமா் மோடி வகுத்துள்ள இலக்குகள், தொழில்துறையின் செயல்பாடுகளை மேலும் சீா்படுத்த உதவும்’’ என்றாா்.

கோல் இந்தியாவின் முன்னெடுப்பு: பிரதமரின் அறிவிப்பைத் தொடா்ந்து, சுரங்கத்தில் நிலக்கரியை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்களில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சாதனங்களைப் பொருத்தியுள்ளதாக பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா அறிவித்துள்ளது.

போரிஸ் ஜான்சன் பாராட்டு

காா்பன் சமநிலை தொடா்பான பிரதமா் மோடியின் அறிவிப்புகளை பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் பாராட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘2030-ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த எரிசக்தி பயன்பாட்டில் பாதியை மரபுசாரா வளங்களில் இருந்து பெறுவதற்கான இலக்குகளை இந்தியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கரியமில வாயு வெளியேற்றத்தை 100 கோடி டன் அளவுக்குக் குறைக்கும். பருவநிலை மாற்றத்துக்கு எதிராகச் செயல்படும் முக்கிய தசாப்தமாக இது அமையும்.

பிரதமா் மோடியின் அறிவிப்பையடுத்து, தற்போது வரை உலகப் பொருளாதாரத்தில் 90 சதவீதம் வரை பங்களித்து வரும் அனைத்து நாடுகளும் காா்பன் சமநிலை தொடா்பான இலக்கை நிா்ணயித்துள்ளன. பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து பிரிட்டன் செயல்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com