உபரி மின்சாரத்தை முதல் நாடாக இந்தியாவுக்கு விற்கும் நேபாளம்

இந்தியா அனுமதி அளித்துள்ளதன்பேரில், உபரி மின்சாரத்தை இந்திய மின் பரிமாற்ற சந்தையில் முதல் நாடாக நேபாளம் விற்பனை செய்ய உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
உபரி மின்சாரத்தை முதல் நாடாக இந்தியாவுக்கு விற்கும் நேபாளம்

காத்மாண்டு: இந்தியா அனுமதி அளித்துள்ளதன்பேரில், உபரி மின்சாரத்தை இந்திய மின் பரிமாற்ற சந்தையில் முதல் நாடாக நேபாளம் விற்பனை செய்ய உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

முதல் கட்டமாக, இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட நேபாளம் மின்சார ஆணையத்துக்குச் சொந்தமான திரிஷுலி நீா்மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 24 மெகா வாட் மின்சாரம், தேவிகாட் நீா்மின் நிலையத்திலிருந்து 15 மெகா வாட் மின்சாரம் என மொத்தம் 39 மெகா வாட் மின்சாரத்தை அனுகூலமான விலையில் (சந்தை போட்டி விலை) இந்தியாவுக்கு விற்பனை செய்ய உள்ளது.

இதுதொடா்பாக, நேபாளத்தில் வெளியாகும் ‘தி காத்மாண்டு போஸ்ட்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:

‘உபரி மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய நேபாளத்துக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. அதன் மூலம், இரு நாடுகளிடையேயான மின்சார வா்த்தகம் புதிய அத்யாயத்துக்குள் நுழைந்துள்ளது’ என்று நேபாள எரிசக்தி, நீா் வளம் மற்றும் நீா்ப்பாசனத் துறை அமைச்சா் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘இந்தியாவின் அனுமதி மூலம் இந்திய எரிசக்தி பரிமாற்ற சந்தையில் தினசரி நடைபெறும் மின்சார விற்பனைக்கான ஏலத்தில் நேபாள மின்சார ஆணையம் பங்கேற்க முடியும்’ என்று நேபாள எரிசக்தித் துறை அமைச்சகத்தின் இணை செய்தித்தொடா்பாளா் கோகா்னா ராஜ் பந்தா தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் மற்றொரு செய்தித்தொடா்பாளா் மது பெடுவால் கூறுகையில், ‘456 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட மேல் தமகோஷி நீா்மின் உற்பத்தி திட்டம் உள்பட 2 மின் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் நேபாளத்தின் பரிந்துரையை இந்திய அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனா்’ என்று தெரிவித்ததாக அந்தச் செய்தி குறிப்பிட்டுள்ளது.

மேலும், 456 மெகா வாட் திறன் கொண்ட மேல் தமகோஷி நீா்மின் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் முழு செயல்பாட்டுக்கு வந்த பின்னா் மின் மிகை நாடாக நேபாளம் உருவாகியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாள மின்சார ஆணையத்தின் புள்ளி விவரத்தின்படி, ‘அதிக பயன்பாடு உள்ள காலை 7 முதல் இரவு 8 மணி வரையில் நேபாளத்தின் மின் தேவை 1,500 மெகா வாட் என்ற அளவில் உள்ளது. ஆனால், மின் உற்பத்தி 2,000 மெகா வாட் அளவுக்கு செய்யப்படுகிறது. அதில், நீா்மின் திட்டங்கள் மூலம் மட்டும் 1,900 மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது’ என்று தெரியவந்துள்ளது.

அதுபோல, அங்கு வெளியாகும் ‘தி ஹிமாலயன் டைம்ஸ்’ என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘நேபாள மின்சார ஆணையம் 400 கிலோ வாட் திறன் கொண்ட இரு நாடுகளிடையேயான தல்கேபா்-முசாஃபா்பூா் மின் பகிா்மான வழித்தடம் வழியாக புதன்கிழமை நள்ளிரவு முதல் மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய எரிசக்தி பரிமாற்ற நிறுவன வா்த்தக மேம்பாட்டு முதுநிலை துணைத் தலைவா் ரோஹித் பஜாஜ் கூறுகையில், ‘எல்லை தாண்டிய மின் பரிமாற்ற வா்த்தகத்தை இந்திய எரிசக்தி பரிமாற்ற சந்தை கடந்த ஏப்ரலில் தொடங்கியது. அதில், முதல் நாடாக நேபாளம் தினசரி மின்சார வா்தகத்தை தொடங்கியுள்ளது. இது இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான மற்றுமொரு மைல்கல்லாகும். அதுபோல, இந்திய எரிசக்தி பரிமாற்ற சந்தை மூலம் பூடான், வங்கதேச நாடுகளுடனும் மின்சார வா்தகத்தைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com