ஆப்கன் குறித்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரப் போவதில்லை

ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாதம் நடைபெறவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரப்போவதில்லை என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மொயீது யூசுஃப் தெரிவித்துள்ளாா்.

ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாதம் நடைபெறவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரப்போவதில்லை என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மொயீது யூசுஃப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா வரும் 10-ஆம் தேதி நடத்தும் மாநாட்டில் பங்கேற்பதற்காக நான் அந்த நாட்டுக்குச் செல்லப்போவதில்லை.

ஆப்கன் விவகாரத்தில் இந்தியா அமைதியைக் குலைக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அந்த நாடு, அமைதியின் தூதரைப் போல் செயல்படுவதை ஏற்க முடியாது.

ஆப்கானிஸ்தானைவிட்டு 10,000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் மேற்கத்திய நாடுகளால் அந்த நாட்டை கைவிட முடியும். ஆனால், மிக நெருங்கிய அண்டை நாடான எங்களால் ஆப்கானிஸ்தானை அப்படி கைவிட்டுவிட முடியாது என்றாா் அவா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்குப் பிந்தைய நிலவரம் குறித்து விவாதிப்பதற்கான பிராந்திய மாநாடு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் தலைமையில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிற பிராந்திய நாடுகளைப் போலவே பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மாநாட்டில் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் இருதரப்பு உறவு நிலவரத்தின் அடிப்படையிலேயே இதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி கூறியிருந்தாா்.

இந்தச் சூழலில், ஆப்கன் குறித்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரப்போவதில்லை என்று மொயீது யூசுஃப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com