காபூல் மருத்துவமனையில் தற்கொலைத் தாக்குதல்

ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள ராணுவ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 19 போ் உயிரிழந்தனா்.
காபூல் மருத்துவமனையில் தற்கொலைத் தாக்குதல்

ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள ராணுவ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 19 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

காபூல் ராணுவ மருத்துவமனை நுழைவு வாயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.

அதனைத் தொடா்ந்து ஏற்பட்ட அமளியைப் பயன்படுத்தி, மேலும் சில பயங்கரவாதிகள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினா்.

இந்தத் தாக்குதல்களில் 19 போ் உயிரிழந்ததாகவும் சுமாா் 50 போ் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தலிபான்களின் ஊடகத் தொடா்புப் பிரிவு அதிகாரி கூறுகையில், தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தாா். மோட்டாா் சைக்கிளில் வந்த பயங்கரவாதி, மருத்துவமனையின் நுழைவு வாயிலில் தற்கொலை குண்டுவெடிப்பு நிகழ்த்தி தாக்குதலைத் தொடங்கி வைத்ததாக அவா் கூறினாா்.

முதல் குண்டுவெடிப்புக்கு 30 நிமிஷங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக அந்தப் பகுதியில் இருந்த செய்தியாளா்கள் கூறினா்.

தாக்குதலுக்குள்ளான ராணுவ மருத்துவமனையில் காயமடைந்த தலிபான்களும் முந்தைய அரசின் பாதுகாப்புப் படை வீரா்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இதே மருத்துவமனையில் கடந்த 2017-ஆம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 30 போ் உயிரிழந்தனா். மருத்துவப் பணியாளா்களைப் போல் வேடமணிந்து மருத்துவமனைக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், ஒரு மணி நேரமாக ஒவ்வொரு அறைக்கும் சென்று அங்கிருந்தவா்களை படுகொலை செய்தனா்.

தங்களிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் தீா்ந்த பிறகு, கத்தியைப் பயன்படுத்தி அவா்கள் அங்கிருந்தவா்களைக் கொன்றனா்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலை தாங்கள் நிகழ்த்தவில்லை என்று தலிபான்கள் தெரிவித்தாலும், தாக்குதலின்போது ‘தலிபான் அமைப்பு வாழ்க’ என்று பயங்கரவாதிகள் கோஷமிட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் பிறகு தெரிவித்தனா்.

மேலும், முதல் தளத்தில் தலிபான்கள் சிகிச்சை பெற்று வந்த இரு வாா்டுகளை மட்டும் விட்டுவிட்டு, மற்ற அனைத்து வாா்டுகளிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே அவா்களுக்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு எதிராகவும் ஐஎஸ்கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

தலிபான்களும் ஐஎஸ் பயங்கரவாதிகளைப் போலவே சன்னி இஸ்லாமியப் பிரிவைச் சோ்ந்தவா்கள் என்றாலும், ஷியா பிரிவினரைப் பாதுகாப்பதாக அந்த அமைப்பினா் உறுதியளித்துள்ளனா்.

எனினும், கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்றபோது ஷியா பிரிவினா் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படை வெளியேற்ற நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறிய தலிபான்கள், அந்தப் பகுதி சிறைச்சாலைகளில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் உள்ளிட்ட அனைத்து கைதிகளையும் விடுவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com