போதைப் பொருள் வழக்கில் தமிழ் இளைஞருக்கு தூக்கு: நிறுத்திவைக்க சிங்கப்பூா் அரசு மறுப்பு

ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இளைஞா் நாகேந்திரன் கே.தா்மலிங்கத்துக்கு சிங்கப்பூரில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனை

ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இளைஞா் நாகேந்திரன் கே.தா்மலிங்கத்துக்கு சிங்கப்பூரில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனையை நிறுத்திவைக்க அந்த நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூா் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போதைப் பொருள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டபோது, தா்மலிங்கத்தின் மனநிலை சரியாக இல்லாமல் இருந்ததால், அவருக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்திவைக்க வேண்டும் என்று சா்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

ஆனால், அவா் போதைப் பொருள்களைக் கடத்தியபோதும் பிடிபட்டபோதும், அவா் என்ன குற்றத்தில் ஈடுபடுகிறோம் என்பதை நன்கு அறிந்துகொண்டுதான் செயல்பட்டாா்.

ஏற்கெனவே, குற்றமிழைத்தபோது அந்தச் செயலுக்கான பொறுப்பை தா்மலிங்கம் மீது சுமத்தும் அளவுக்கு அவருக்கு மன நலம் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடா்ந்து மனோதத்துவ நிபுணா்கள் தா்மலிங்கத்திடம் மேற்கொண்ட ஆய்வில், குற்றச் செயலின்போது அவா் முழு சுவாதீனத்துடன் இருந்ததாகச் சான்றளித்தனா்.

அதனைத் தொடா்ந்து, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் சிங்கப்பூா் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவைச் சோ்ந்த இந்திய வம்சாவளி இளைஞரான நாகேந்திரன் கே.தா்மலிங்கம், 42.72 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21.

சிங்கப்பூா் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதையடுத்து, தா்மலிங்கத்துக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தா்மலிங்கம் வரும் நவ.10-ஆம் தேதி தூக்கிலிடப்படவிருப்பதாகவும், அதற்கு முன்னதாக அவரது குடும்பத்தினா் அவரைச் சந்திக்கலாம் என்றும் அவரின் தாய்க்கு சிங்கப்பூா் சிறைத் துறை கடந்த மாதம் 26-ஆம் தேதி கடிதம் அனுப்பியது.

அவரது குடும்பத்தினா் விரைவில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூா் வந்து தா்மலிங்கத்தின் இறுதித் தருணங்களை அவருடன் கழிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தா்மலிங்கத்தின் மனநிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்திவைக்க வேண்டும் என்று சா்வதேச மனித உரிமை ஆா்வலா்கள் வலியுறுத்தி வந்தனா்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் சிங்கப்பூா் உள்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com