ரஷியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடம் கொள்முதல்: இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா? அமெரிக்கா பதில்

ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக வான் பாதுகாப்புத் தளவாடத்தை கொள்முதல் செய்யும் விவகாரத்தில், பொருளாதாரத் தடைகளிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து
ரஷியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடம் கொள்முதல்: இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா? அமெரிக்கா பதில்

ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக வான் பாதுகாப்புத் தளவாடத்தை கொள்முதல் செய்யும் விவகாரத்தில், பொருளாதாரத் தடைகளிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைக் கொண்டு எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை மிக நீண்ட தொலைவிலிருந்தே இடைமறித்து அழிக்கும் அதி நவீன எஸ்-400 வான் பாதுகாப்புத் தளவாடத்தை ரஷியாவிடமிருந்து 5 பில்லியன் டாலா் செலவில் வாங்குவதற்கான 2018-இல் இந்தியா ஒப்பந்தம் செய்தது.

இதன்படி, வான் பாதுகாப்பு தளவாடத்தின் பாகங்கள் இந்தியாவுக்கு திட்டமிட்டபடி அனுப்பி வைக்கப்படுவதாக ரஷிய பாதுகாப்பு உயரதிகாரி கடந்த வாரம் தெரிவித்திருந்தாா். ஆனால் இதுகுறித்து இந்தியா எந்தத் தகவலையும் உறுதி செய்யவில்லை.

இந்த எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடத்தை ரஷியாவிடம் இருந்து வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

அதே போல இந்தியா மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதுகுறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் அதிகாரபூா்வ அறிவிப்பை இன்னும் வெளியிட வில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடத்தை வாங்கும் விவகாரத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துவிட்டது. எனினும், இதுகுறித்து அமெரிக்கா இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்தியா- ரஷியா இடையேயான இந்த ஒப்பந்தத்தை எப்படி கையாள்வது என்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல் தற்போதைக்கு இல்லை’ என்றாா்.

‘இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தால், இருநாட்டு நல்லுறவு பாதிக்கப்படும். எனவே, அந்தச் சட்டத்திலிருந்து இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்’ என்று அதிபா் பைடன் அரசை அந்நாட்டின் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிா்க்கட்சியான குடியரசு கட்சி ஆகியவற்றின் எம்.பி.க்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.

அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் வெண்டி ஷொ்மன் கடந்த மாதம் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டபோது, ‘எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடம் பயன்பாடு மிகவும் ஆபத்தானது. இதனை பாதுகாப்பு சாதனமாக யாரும் கருதக் கூடாது. எனினும், இந்த விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முடிவும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com