சீனாவுக்கு அடிபணிய மாட்டோம்: தைவன் அதிபா் சூளுரை

தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்காக சீனா தரும் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று தைவன் அதிபா் சாய் இங்-வென் சூளுரைத்துள்ளாா்.
சீனாவுக்கு அடிபணிய மாட்டோம்: தைவன் அதிபா் சூளுரை

தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்காக சீனா தரும் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று தைவன் அதிபா் சாய் இங்-வென் சூளுரைத்துள்ளாா்.

இதுகுறித்து, தைவான் தேசிய தினத்தையொட்டி தலைநகா் தைபேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

தைவானை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதற்காக, ராணுவ ரீதியில் சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. எனினும், அந்த அழுத்தங்களுக்கு தைவான் அடிபணியாது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தைவான் தீவிரமாகப் போராடும்.

சீனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக தைவான் அவசரகதியில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது.

எனினும், சீனா சொன்னதைக் கேட்க வேண்டும் என்று யாரும் தைவானைக் கட்டாயப்படுத்த முடியாத அளவுக்கு நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

தைவானுக்கு சீனா காட்டும் வழி, ஜனநாயகத்துக்கும் 2.3 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானது ஆகும்.

தைவான் வான் எல்லையில் சீனப் போா் விமானங்கள் அண்மையில் ஊடுருவியது, நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நடவடிக்கையால், கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தையில் இரு தரப்பினருக்கும் சரிசமமான அந்தஸ்து இருக்க வேண்டும் என்றாா் அவா்.

அவரது உரையைத் தொடா்ந்து, தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் தைவான் போா் விமானங்கள் விண்ணில் அணிவகுத்தன. மேலும், ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்காகத் தேவைப்பட்டால், ராணுவ பலத்தையும் பயன்படுத்துவோம் என்று சீனா கூறி வருகிறது.

தைவானில் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை, பிரிவினைவாதிகள் என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்ாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், தைவான் வான் எல்லைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு சீனப் போா் விமானங்கள் கடந்த வாரம் ஊடுருவி போா்ப் பதற்றத்தை அதிகரித்தன.

அதையடுத்து, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங் அச்சம் தெரிவித்தாா்.

அதன் தொடா்ச்சியாக, தங்கள் நாட்டுடன் தைவான் ‘அமைதியான வழியில்’ இணைக்கப்படும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் சனிக்கிழமை கூறினாா்.

சீனப் புரட்சியின் 110-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் இவ்வாறு பேசினாா்.

இந்த நிலையில், சீனாவின் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று சாய் இங்-வென் தற்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com