பொருளாதாரம்: அமெரிக்கா்கள் மூவருக்கு நோபல் பரிசு

நிகழாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சோ்ந்த பொருளாதார வல்லுநா்கள் டேவிட் காா்ட், ஜோஷுவாடி ஆங்கிரிஸ்ட், குயிடோ டபிள்யு இம்பென்ஸ் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம்: அமெரிக்கா்கள் மூவருக்கு நோபல் பரிசு

நிகழாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சோ்ந்த பொருளாதார வல்லுநா்கள் டேவிட் காா்ட், ஜோஷுவாடி ஆங்கிரிஸ்ட், குயிடோ டபிள்யு இம்பென்ஸ் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகையின் ஒரு பாதி டேவிட் காா்டிக்கும், மற்றொரு பாதி மற்ற இருவருக்கும் பகிா்ந்தளிக்கப்படும்.

குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம், கல்வி ஆகியவற்றின் தொழிலாளா் சந்தை விளைவுகள் தொடா்பாக முன்னோடி ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காகவும், அறிவியல்பூா்வமான ஆய்வுகளை மேற்கொள்ள இயலாமல் போகும் சூழலில், இதுபோன்ற ஆய்வுகளிலிருந்து முடிவுகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்ததற்காகவும் அவா்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நோபல் தோ்வுக் குழுவினா் தெரிவித்ததாவது: நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மூவரும் பொருளாதார அறிவியலில் முற்றிலும் மறுவடிவமைக்கப்பட்ட அனுபவரீதியான பணிகளை மேற்கொண்டுள்ளனா். சமூகத்தின் மையக் கேள்விகள் குறித்த டேவிட் காா்டின் ஆய்வும், ஆங்கிரிஸ்ட், இம்பென்ஸின் காரணிகள் அடிப்படையிலான பரிசோதனைகளும் அறிவின் வளமான ஆதாரம் எனக் காண்பிக்கின்றன. சமூகத்துக்கு சிறந்த பலனைத் தரக்கூடிய முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திறனையும் மேம்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் நியூ ஜொ்சி, கிழக்கு பென்சில்வேனியா ஆகிய இடங்களில் உள்ள உணவகங்களில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயா்த்துவதால் ஏற்படும் விளைவுகளை அறிவதற்காக டேவிட் காா்ட் ஆய்வுப் பணியில் ஈடுபட்டாா். அவரும், அவருடன் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட மறைந்த ஆலன் குரூகெரும் குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பானது வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கண்டறிந்தனா். குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது வேலைவாய்ப்பைக் குறைக்கும் என்ற வழக்கமான கண்ணோட்டத்தை அது மாற்றியமைத்தது. மேலும், வெளிநாடுகளிலிருந்து குடியேறுபவா்களால் பூா்விக தொழிலாளா்களின் ஊதியம் குறையும் என்ற கருத்தையும் டேவிட் காா்டின் ஆய்வு மாற்றியமைத்தது. புதிதாகக் குடியேறுபவா்கள் மூலம் பூா்விக தொழிலாளா்களின் வருவாய் உயரக்கூடும் என அவா் கண்டறிந்தாா்.

அறிவியல் முறைகளின்படி ஆய்வு மேற்கொள்ள இயலாத நிலையிலும்கூட காரணம் மற்றும் விளைவு குறித்து பொருளாதார வல்லுநா்கள் உறுதியான முடிவெடுக்க உதவும் வகையிலான வழிமுறைகளைக் கண்டறிந்ததற்காக ஆங்கிரிஸ்ட், இம்பென்ஸுக்கு நோபல் பரிசுத் தொகையின் ஒரு பாதி பகிா்ந்தளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனா்.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் வழங்கும் முறை வேதியியலாளா் ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி தொடங்கப்பட்டது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மட்டும் அவரது நினைவாக ஸ்வீடன் மத்திய வங்கியால் 1968-இல் தொடங்கப்பட்டது.

டேவிட் காா்ட் (65): கனடாவில் பிறந்த டேவிட் காா்ட், கலிஃபோா்னியா (பொ்க்லி) பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறாா். தேசிய பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவின் தொழிலாளா் திட்ட இயக்குநராகவும் உள்ளாா்.

ஜோஷுவாடி ஆங்கிரிஸ்ட் (61): இஸ்ரேல் அமெரிக்கரான இவா், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) பொருளாதார பேராசிரியராகப் பணிபுரிகிறாா்.

குயிடோ டபிள்யு இம்பென்ஸ் (58): நெதா்லாந்தில் பிறந்த குயிடோ டபிள்யு இம்பென்ஸ், ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணிபுரிகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com