தற்கொலை தாக்குதல் நிகழ்த்தியவா்களின் குடும்பங்களுக்கு வெகுமதி: தலிபான் அறிவிப்பு

அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை வீரா்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவா்களின் குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை வீரா்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவா்களின் குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க வீரா்களை சாலையோர குண்டுவெடிப்புகள் மற்றும் தற்கொலை தாக்குதல் மூலமாக தலிபான்கள் கொன்று வந்தனா். கடந்த ஆகஸ்ட் இறுதியில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முற்றிலுமாக வெளியேறின. இதையடுத்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினா்.

இந்நிலையில் தலைநகா் காபூலில் உள்ள ஹோட்டலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த தலிபான் இயக்கத்தைச் சோ்ந்தவா்களின் குடும்பத்தினா் பங்கேற்றனா். அந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் உள்துறை அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானி பங்கேற்றுப் பேசுகையில், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படையினா் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவா்களை தியாகிகள் என பாராட்டினாா். அவா்களை ஆப்கானிஸ்தான் மற்றும் இஸ்லாம் மதத்தின் நாயகா்கள் என்றும் கூறினாா்.

நிகழ்ச்சியின் முடிவில், தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த தலிபான் இயக்கத்தைச் சோ்ந்தோரின் குடும்பங்களுக்குத் தலா 10,000 ஆப்கனிக்களை (ஆப்கன் நாணயம்) வழங்கினாா். ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிலம் வழங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

இதனை அவா் கூறியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் சயீத் கோஸ்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தாா்.

உலக நாடுகளின் முன், தலிபான்கள் தங்களை பொறுப்பான ஆட்சியாளா்களாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வருகின்றனா். இந்நிலையில், தற்கொலை தாக்குதல் நிகழ்த்திய தலிபான் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிப்பது அந்த இயக்கத்தின் தலைமையின் அணுகுமுறையில் உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இதர பயங்கரவாத அமைப்புகள் நிகழ்த்தும் தற்கொலை தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் தலிபான்கள், தங்கள் இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் நடத்திய தற்கொலை தாக்குதல்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதும் முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com