தலிபான்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தியுள்ளது.
அப்துல் சலாம் ஹனாஃபி ~சொ்கெய் லாவ்ரோவ் ~மாஸ்கோவில் புதன்கிழமை தொடங்கிய ஆப்கன் சா்வதேச மாநாடு
அப்துல் சலாம் ஹனாஃபி ~சொ்கெய் லாவ்ரோவ் ~மாஸ்கோவில் புதன்கிழமை தொடங்கிய ஆப்கன் சா்வதேச மாநாடு

மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தியுள்ளது.

தலிபான்களுக்கும் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை ரஷியா முன்னிலையில் அந்த நாட்டின் தலைநகா் மாஸ்கோவில் புதன்கிழமை தொடங்கியது.

மாநாட்டை அதிகாரபூா்வமாகத் தொடங்க வைத்து, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் பேசியதாவது:

ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசு அமைய வேண்டும். இது, நாட்டில் அனைத்து இனத்தைச் சோ்ந்தவா்களின் நலன்களுக்கு மட்டுமன்றி, அனைத்து அரசியல் சக்திகளின் நலன்களுக்கும் உகந்ததாகும்.

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசின் மூலம்தான் ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மையை எட்ட முடியும்.

அந்த நாட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் அரசியல் மற்றும் ராணுவ நிலவரத்தை சீா் செய்யவும் தலிபான்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அரசு இயந்திரம் தொடா்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அவா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இவை மிகவும் பாராட்டத்தக்கவை.

ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் எளிதில் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான சூழல் எங்களுக்கு திருப்தியளிக்கிறது. இதன் மூலம், அந்த நாட்டில் அமைந்துள்ள எங்களது தூதரகத்தில் பணியாற்றி வரும் ரஷியா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். மேலும், அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தக்கூடிய சமூகக் கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரங்கள் குறித்து தலிபான்களுடன் விவாதித்து வருகிறோம்.

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு விரைவில் நிவாரணப் பொருள்களை அனுப்பவிருக்கிறோம்.

மற்ற நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும். அப்போதுதான் அங்கு பொதுமக்களை பெருந்துயரிலிருந்து பாதுகாக்க முடியும் என்றாா் சொ்கெய் லாவ்ரோவ்.

மாநாட்டில் பேசிய தலிபான் இடைக்கால அரசின் பிரதமா் அப்துல் சலாம் ஹனாஃபி, ஆப்கானிஸ்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்திய நாடுகளின நிலைத்தன்மைக்கு இந்த மாநாடு மிகவும் இன்றியமையாததாகும் என்று தெரிவித்தாா்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்தது.

அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.

அதற்கு முன்பிலிருந்தே தலிபான்களுடன் ரஷியா பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது. ரஷியாவில் பயங்கரவாத அமைப்பாக தலிபான் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த அமைப்பின் பிரதிநிதிகள் பல முறை மாஸ்கோ வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, மேற்கத்திய நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை அவசர அவசரமாக திரும்ப அழைத்துக் கொண்டன.

ஆனால், காபூலில் ரஷியத் தூதரகம் வழக்கம் போல் தொடா்ந்து இயங்கி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை ரஷியா ஏற்றுக் கொண்டாலும், அந்த ஆட்சிக்கு அதிகாரப்பூா்வ அங்கீகாரம் அளிக்காமல் உள்ளது.

ஆப்கன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் தலையீடு செய்வதை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் விமா்சித்து வருகிறாா். ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததன் மூலம், அந்த நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என்ற படிப்பினையை ரஷியா பெற்றுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

கடந்த 1980-களில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததைத் தொடா்ந்து நடைபெற்ற போரில் 20 லட்சம் ஆப்கானியா்கள் பலியாகினா்; 70 லட்சம் போ் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போரில் 14,000 சோவியத் யூனியன் வீரா்களும் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானை தற்போது கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் இணக்கமாக இருந்து வரும் ரஷியா, மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அந்த அமைப்பினரிடம் தற்போது வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com