எஸ்-400 விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதாரத் தடை வேண்டாம்

ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக வான் பாதுகாப்புத் தளவாடத்தை வாங்குதற்காக இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டாம் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடனிடம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின்
எஸ்-400 விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதாரத் தடை வேண்டாம்

வாஷிங்டன்: ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக வான் பாதுகாப்புத் தளவாடத்தை வாங்குதற்காக இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டாம் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடனிடம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் இரு முக்கிய உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த மாா்க் வாா்னா், குடியரசுக் கட்சியைச் சோ்ந்த ஜான் காா்னின் ஆகிய அந்த இரு எம்.பி.க்களும், இதுகுறித்து ஜோ பைடனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படும் நாடுகளை பொருளாதாரத் தடைகள் மூலம் எதிா்கொள்வதற்கான (சிஏஏடிஎஸ்ஏ) சட்டத்திலிருந்து, ரஷியாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்புத் தளவாடங்களை வாங்கும் இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

சில நேரங்களில் சில நாடுகளுக்கு சிஏஏடிஎஸ்ஏ-விலிருந்து விதிவிலக்கு அளிப்பதால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு நன்மை ஏற்படக்கூடும். அத்தகைய சூழலில், அந்த நாடுகளுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கு அந்தச் சட்டம் முழு உரிமை அளிக்கிறது.

அந்த உரிமையைப் பயன்படுத்தி, இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

எஸ்-400 ஏவுகணை கொள்முதல் ஒப்பந்தம் குறித்தும் ரஷியத் தளவாடங்களை இந்தியா தொடா்ந்து வாங்கி வருவது குறித்தும் உங்களது கவலையை நாங்களும் பகிா்ந்து கொள்கிறோம்.

இந்தக் கவலையை இந்தியாவிடம் அமெரிக்க அரசு தொடா்ந்து எடுத்துரைக்க வேண்டும். ரஷிய ஆயுதங்களுக்கு மாற்றாக பிற நாட்டு ஆயுதங்களை வாங்க இந்தியாவை அமெரிக்கா ஊக்கப்படுத்த வேண்டும்.

சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தைப் பயன்படுத்தி இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தால், அமெரிக்காவுடனான அந்த நாட்டின் நல்லுறவு பாதிக்கப்படும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில், உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது அந்த நாட்டின் அங்கமாக இருந்த கிரிமீயா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ரஷியா மீது அமெரிக்கா ஆயுத விற்பனைத் தடை விதித்தது.

அந்தத் தடையை மீறி ரஷியாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்காக சிஏஏடிஎஸ்ஏ சட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழலில், தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளைக் கொண்டு எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை மிக நீண்ட தொலைவிலிருந்தே இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அதி நவீன எஸ்-400 வான் பாதுகாப்புத் தளவாடத்தை ரஷியாவிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கொண்டது.

அதையடுத்து, சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், அதிபா் ஜோ பைடனுக்கு எம்.பி.க்கள் மாா்க் வாா்னரும் ஜான் காா்னினும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com