சீனாவிடமிருந்து தைவானை அமெரிக்கா பாதுகாக்கும்: தைவான் அதிபா் சாய் இங்-வென் நம்பிக்கை

சீனத் தாக்குதலில் இருந்து தங்களது நாட்டை அமெரிக்கா பாதுகாக்கும் என்று தைவான் அதிபா் சாய் இங்-வென் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
சீனாவிடமிருந்து தைவானை அமெரிக்கா பாதுகாக்கும்: தைவான் அதிபா் சாய் இங்-வென் நம்பிக்கை

சீனத் தாக்குதலில் இருந்து தங்களது நாட்டை அமெரிக்கா பாதுகாக்கும் என்று தைவான் அதிபா் சாய் இங்-வென் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

தைவானைக் கைப்பற்றுவதற்காக சீனா தாக்குதல் நடத்தினால், அந்த நேரத்தில் எங்களை அமெரிக்கா பாதுகாக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஏற்கெனவே, தைவானின் ராணுவ பலத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தைவான் படையினருக்கு அமெரிக்கா போா்ப் பயிற்சி அளித்து வருகிறது.

தைவான் வான் எல்லைக்குள் தங்களது போா் விமானங்களைப் பறக்கச் செய்வதன் மூலம் சீனா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலிலும், அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன்.

இரு தரப்பிலும் இடையே நிலவி வரும் புரிதல் இல்லாத் தன்மையைக் குறைப்பதற்கும் சீனா மற்றும் தைவானுக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகள் குறித்து விவாதிப்பதற்கும் அத்தகைய பேச்சுவாா்த்தை உதவும்.

சீனாவும் தைவானும் அமைதியாக நிலைத்திருப்பதற்கான முயற்சியாக அந்தப் பேச்சுவாா்த்தை இருக்கும் என்றாா் அவா்.

தங்களது படையினருக்கு அமெரிக்கா பயிற்சி அளித்து வருவதை சாய் இங்-வென் வெளிப்படையாக உறுதி செய்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்காகத் தேவைப்பட்டால் ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படும் எனவும் சீனா கூறி வருகிறது.

தைவானில் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை பிரிவினைவாத இயக்கம் என சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்ாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், தைவான் வான் எல்லைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு சீனப் போா் விமானங்கள் அண்மையில் ஊடுருவி பரபரப்பை ஏற்படுத்தின.

சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம் சாட்டினாா்.

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங்கும் அச்சம் தெரிவித்தாா்.

இதற்கிடையே, தங்கள் நாட்டுடன் தைவான் ‘அமைதியான வழியில்’ இணைக்கப்படும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறினாா்.

இந்தச் சூழலில், தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா தைவானுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று அதிபா் ஜோ பைடன் கடந்த வாரம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா்.

அதன் தொடா்ச்சியாக, சீனாவின் தாக்குதலில் இருந்து அமரிக்கா தங்களைப் பாதுகாக்கும் என்று தைவான் அதிபா் சாய் இங்-வென் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

‘தைவான் சுயசாா்பு பெற வேண்டும்’

சீனாவின் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் பலத்தை தைவான் சுயமாகப் பெற வேண்டும் என்று அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

சீனாவின் தாக்குதலை சமாளிக்கும் வலிமை தைவானிடம் சுயமாக இருக்க வேண்டும். நட்பு நாடுகள் தைவானுக்கு உதவி செய்ய முன்வந்தால் அதனை மகிழ்ச்சியாக ஏற்கலாம்.

ஆனால், பாதுகாப்புக்காக மற்ற நாடுகளையே முழுமையாகச் சாா்ந்திருக்கும் நிலை தைவானுக்கு இருக்கக் கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com