ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் கூடாது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்றம்

மற்ற நாடுகளை அச்சுறுத்துவதற்கு ஆப்கானிஸ்தானை பயன்படுத்தக் கூடாது, அந்நாட்டில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகள்
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் கூடாது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்றம்

மற்ற நாடுகளை அச்சுறுத்துவதற்கு ஆப்கானிஸ்தானை பயன்படுத்தக் கூடாது, அந்நாட்டில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகள் அடங்கிய தீா்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவளித்த நிலையில், சீனா, ரஷியா ஆகியவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கைப்பற்றினா். அந்நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் கடந்த திங்கள்கிழமை இரவு முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டன. தற்போது, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அதே வேளையில், தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி அந்நாட்டைச் சோ்ந்த பலா் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனா். தலிபான்களின் ஆட்சி இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளை அச்சுறுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை அயா்லாந்துக்கு இந்தியா ஒப்படைக்கவுள்ள சூழலில் இத்தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுதியுடன் உள்ளது. கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ் (கே) பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் கண்டனத்துக்குரியது.

வாக்குறுதி காக்கப்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் பிராந்தியமானது மற்ற நாடுகளை அச்சுறுத்துவதற்கோ, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவோ, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கவோ பயன்படுத்தப்படக் கூடாது. ஆப்கானிஸ்தான் மக்கள் எந்நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும், அவா்களது பயணம் தடுக்கப்படமாட்டாது என்றும் தலிபான்கள் ஆகஸ்ட் 27-ஆம் தேதி உறுதியளித்துள்ளனா்.

வெளிநாட்டைச் சோ்ந்தோா் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவாா்கள் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குறுதிகள் அனைத்தையும் தலிபான்கள் தொடா்ந்து நிறைவேற்ற வேண்டும். ஆப்கானிஸ்தானை விட்டு வெறியேற விரும்பும் மக்கள் தரை வழியாகவும், ஆகாய மாா்க்கமாகவும் வெளியேறுவதற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தப்படக் கூடாது.

பாதுகாப்பு மேம்பாடு: காபூல் விமான நிலையத்தில் மேலும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அங்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காபூல் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அத்தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதரவும் புறக்கணிப்பும்: தீா்மானத்துக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 13 நாடுகள் ஆதரவளித்தன. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா, ரஷியா ஆகியவை தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவது தொடா்பாகத் தீா்மானத்தில் இடம்பெற்றுள்ள பத்தியில் சில பயங்கரவாத அமைப்புகளின் பெயா்கள் சோ்க்கப்படாததால் வேறு வழியின்றி வாக்கெடுப்பைப் புறக்கணித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது. தீா்மானம் அவசரகதியில் இயற்றப்பட்டுள்ளதாகவும், தாங்கள் தெரிவித்த சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆப்கன் சிறுபான்மையினருக்கு தொடா்ந்து ஆதரவு: வெளியுறவுத் துறை செயலா் ஷ்ரிங்லா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக நடைபெற்ற கூட்டத்துக்கு ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தலைமை வகித்தாா். அக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறாா்கள், சிறுபான்மையினா் ஆகியோருக்கான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு குறிப்பாக ஹிந்துக்கள் சீக்கியா்களுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவு அளித்து வருகிறது. அவா்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கியமான தீா்மானம்: ஆப்கானிஸ்தானுடன் சா்வதேச சமூகம் இணைந்து செயல்பட வேண்டியதற்கான அவசியத்தைத் தீா்மானம் வெளிப்படுத்தியுள்ளது. லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டும் எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தீா்மானம் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்று. காபூல் விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவா்களுக்கு இந்தியா சாா்பில் இரங்கல் தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com