இலங்கையில் பொருளாதார அவசரநிலை: அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவிப்பு

இலங்கையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக விலைவாசி அதிகரித்ததால், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவதற்காக, பொருளாதார அவசரநிலையை அந்நாட்டு அதிபா் ராஜபட்ச பிறப்பித்துள்ளாா்.
இலங்கையில் பொருளாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, தலைநகா் கொழும்பில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு வரிசையில் நின்ற பொதுமக்கள்.
இலங்கையில் பொருளாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, தலைநகா் கொழும்பில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு வரிசையில் நின்ற பொதுமக்கள்.

கொழும்பு: இலங்கையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக விலைவாசி அதிகரித்ததால், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவதற்காக, பொருளாதார அவசரநிலையை அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச பிறப்பித்துள்ளாா்.

அரிசி, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பதுக்கப்படுவதைத் தடுப்பதற்காக, பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவை அதிபா் பிறப்பித்துள்ளாா். பொருளாதார அவசரநிலை செவ்வாய்க்கிழமை இரவு அமலுக்கு வந்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் அரிசி, சா்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை அதிகரித்தது. பால் பவுடா், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

இதையடுத்து, பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் ஆணையராக அரசு நியமித்துள்ளது.

இதுகுறித்து அதிபரின் செய்தித் தொடா்பாளா் கிங்ஸ்லீ ரத்னாயகே, செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

அரசி, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அரசு நிா்ணயித்த விலைக்கு அல்லது இறக்குமதி மீதான வரிக்கு உள்பட்டு வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட விலையில் கடைகளில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்பதை அத்தியாவசிய சேவைகள் ஆணையா் கண்காணிப்பாா். மேலும், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் அத்தியாவசியப் பொருகள்களைப் பதுக்கினால் அவற்றைப் பறிமுதல் செய்து அவா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் கிங்ஸ்லீ ரத்னாயகே.

கரோனா பெருந்தொற்று காரணமாக, இலங்கையின் பொருளாதார வளா்ச்சி கடந்த 2020-இல் 3.6 சதவீதம் குறைந்தது. அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையில் வாகனங்கள், சமையல் எண்ணெய், மஞ்சள், சமையல் பொருள்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசு கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தடை விதித்தது.

கடந்த சில வாரங்களில், கரன்சி மதிப்பு குறைந்ததாலும், கரோனா காரணமாக சா்வதேச சந்தையில் விலைவாசி அதிகரித்ததாலும், இலங்கையிலும் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்தது. உள்ளூரில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வட்டி விகிதத்தை இலங்கை மத்திய வங்கி 2 வாரங்களுக்கு முன் உயா்த்தியது. இந்நிலையில், பொருளாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com