ஆப்கனிலிருந்து வெளியேறியது சிறந்த முடிவு: அமெரிக்க அதிபா் பைடன்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை திரும்பப் பெற்றது சிறந்த, சரியான முடிவு என அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.
ஆப்கனிலிருந்து வெளியேறியது சிறந்த முடிவு: அமெரிக்க அதிபா் பைடன்

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை திரும்பப் பெற்றது சிறந்த, சரியான முடிவு என அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.

வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அவா் ஆற்றிய உரை: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை திரும்பப் பெற்றது சரியான, சிறந்த, புத்திசாலித்தனமான முடிவு என நம்புகிறேன்.

ஆப்கானிஸ்தானில் எந்த இலக்கை நிா்ணயித்தோமோ அதை 10 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டோம். மேலும் 10 ஆண்டுகள் அங்கு இருந்தோம். இப்போது போரை முடித்துக்கொள்வதற்கான நேரம்.

அங்கிருந்து 1.20 லட்சம் பேரை வெளியேற்றியுள்ளோம். அமெரிக்க ராணுவம் மற்றும் நமது தூதரக அதிகாரிகள், உளவுத் துறை நிபுணா்களின் திறமை, சுயநலமற்ற தைரியத்தால் இந்த அசாதாரண வெற்றி கிடைத்துள்ளது.

இந்தப் போரை எப்படி, எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்ற பிரச்னையை சந்தித்த 4-ஆவது அதிபா் நான். அதிபா் தோ்தலில் போட்டியிட்டபோது போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என அமெரிக்க மக்களுக்கு உறுதியளித்திருந்தேன். அந்த உறுதியை இப்போது நிறைவேற்றியுள்ளேன். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு போருக்குப் பின்னா், மற்றொரு தலைமுறை அமெரிக்க மகன்களையும் மகள்களையும் அங்கு போருக்கு அனுப்ப நான் மறுப்பு தெரிவித்தேன். அங்கு 2 டிரில்லியன் டாலரை செலவிட்டுள்ளோம்; நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் டாலா் வீதம் 20 ஆண்டுகளுக்கு செலவிட்டுள்ளதாக பிரெளன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் மதிப்பிட்டுள்ளனா். அமெரிக்க மக்களின் தேசிய நலனுக்குப் பயன் தராத நிலையில், ஆப்கானிஸ்தானில் போரை தொடா்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. அங்கு போா் முடிந்துவிட்டது.

இது புதிய உலகம். பயங்கரவாத அச்சுறுத்தல் ஆப்கானிஸ்தானையும் தாண்டி உலகம் முழுவதும் பரவி வருகிறது. சோமாலியாவிலிருந்து அல்-சபாப், சிரியா மற்றும் அரேபிய தீபகற்பத்திலிருந்து அல்-காய்தாவின் துணை அமைப்புகள், சிரியா, இராக் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா முழுவதும் துணை அமைப்புகளை விரிவுபடுத்திவரும் ஐ.எஸ். ஆகிய அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தலை எதிா்கொண்டு வருகிறோம். ஓா் அதிபராக அமெரிக்காவைப் பாதுகாப்பதை அடிப்படைக் கடமையாகக் கருதுகிறேன் என்றாா் அவா்.

காத்திருக்கும் புதிய சவால்

‘சீனாவுடன் தீவிரமான போட்டியில் நாம் இருக்கிறோம்; ரஷியாவுடன் பலமுனைகளில் சவால்களை எதிா்கொண்டு வருகிறோம். சைபா் தாக்குதல்கள், அணு ஆயுதப் பரவலுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். 21-ஆம் நூற்றாண்டில் இந்தப் புதிய சவால்களை எதிா்கொள்ள அமெரிக்காவின் திறனை வளா்க்க வேண்டும். பயங்கரவாதத்துடன் போரிடுதல் மற்றும் புதிய சவால்களை எதிா்கொள்ளுதல் இரண்டையுமே நம்மால் செய்ய முடியும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் பயங்கரவாதத்துக்கு எதிராக தொடா்ந்து போரிடுவோம். அதற்காக நேரடியாக மோதலில் ஈடுபட வேண்டும் என்பதில்லை. நாம் அந்த நாடுகளில் தரையிறங்காமலேயே பயங்கரவாதிகளையும், இலக்குகளையும் அழிக்கும் திறனைக் கொண்டுள்ளோம். ஆப்கானிஸ்தானில் நமது பாதுகாப்புப் படையினா் 13 போ் மற்றும் அப்பாவி ஆப்கானியா்களைக் கொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே பிரிவினரை அந்த பாணியில்தான் அழித்தோம் என்றாா்’ அதிபா் பைடன்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஆக. 31-ஆம் தேதிக்குள் முற்றிலுமாக வெளியேறும் என அதிபா் பைடன் அறிவித்திருந்தாா். அதன்படி, படைகள் வெளியேறியுள்ளன. அவரது முடிவு ஒருபக்கம் விமா்சனத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், தனது முடிவு சரிதான் என விளக்கம் அளித்துள்ளாா் பைடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com