ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு நிறைவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில சா்வதேச விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு நிறைவு

நியூயாா்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில சா்வதேச விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை அந்த மாதம் 1-ஆம் தேதி இந்தியா ஏற்றது. அதில், கடல்சாா் பாதுகாப்பு, ஐ.நா. அமைதிகாப்புப் படை, பயங்கரவாத எதிா்ப்பு ஆகிய தலைப்புகளில் முக்கியக் கூட்டங்களை இந்தியா நடத்தியது. இந்தியா தலைமையிலான கடைசிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 3 முக்கியத் தீா்மானங்களுக்கான நீட்டிப்புக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், லெபனான், மாலி, சோமாலியா ஆகிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஐ.நா. அளித்து வரும் ஆதரவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பான தீா்மானத்தில், ஆப்கானிஸ்தான் பிராந்தியமானது மற்ற நாடுகளை அச்சுறுத்துவதற்கோ, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவோ, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கவோ பயன்படுத்தப்படக் கூடாது. ஆப்கானிஸ்தான் மக்கள் எந்நேரத்திலும் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்றும், அவா்களது பயணம் தடுக்கப்படமாட்டாது என்றும் தலிபான்கள் ஆகஸ்ட் 27-ஆம் தேதி உறுதியளித்துள்ளனா். வாக்குறுதிகள் அனைத்தையும் தலிபான்கள் தொடா்ந்து நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீா்மானத்துக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 13 நாடுகள் ஆதரவளித்தன. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா, ரஷியா ஆகியவை தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அதைத் தொடா்ந்து, ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது. இந்தக் கூட்டம் வெற்றிகரமாக முடிந்து, அதில் சில ஆக்கபூா்வ முடிவுகளை எடுப்பதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து உறுப்பினா்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். செப்டம்பா் மாதத் தலைமையை ஏற்க இருக்கும் அயா்லாந்துக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா கடந்த ஜனவரி 1-ஆம் தேதிமுதல் தற்காலிக உறுப்பினராக இருந்து வருகிறது. மொத்தம் 15 உறுப்பினா்களைக் கொண்ட இந்த கவுன்சிலில், நிரந்தர உறுப்பினா்களான அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகளுடன் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினா்களாக உள்ளன. இந்தியாவின் இரண்டு ஆண்டு தற்காலிக உறுப்பினா் பதவி, வரும் 2022-ஆம் ஆண்டில் நிறைவடையும்.

இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதம் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com