தலிபான்களின் புதிய அரசு: இன்று அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தங்களது தலைமையிலான புதிய அரசு குறித்த அறிவிப்பு சனிக்கிழமை (செப். 4) வெளியிடப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனா்.
முல்லா பராதா்
முல்லா பராதா்

ஆப்கானிஸ்தானில் தங்களது தலைமையிலான புதிய அரசு குறித்த அறிவிப்பு சனிக்கிழமை (செப். 4) வெளியிடப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

புதிய அரசின் அதிபராக தலிபான்கள் இயக்கத்தின் இணை நிறுவனரும் அரசியல் பிரிவுத் தலைவருமான முல்லா அப்துல் கனி பராதா் (53) பதவியேற்பாா் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஸபிஹுல்லா முஜாஹித் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் புதிய அரசை வெள்ளிக்கிழமை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த முடிவு ஒரு நாளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என்றாா் அவா்.

கத்தாா் தலைநகா் தோஹாவில் இயங்கி வரும் தலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவா் முல்லா அப்துல் கனி பராதா் புதிய அரசில் அதிபராகப் பொறுப்பேற்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தலிபான் இயக்கத்தை தொடங்கிய முல்லா ஒமரின் மகன் முல்லா முகமது யாகூப், ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஸாய் ஆகியோா் புதிய அரசில் முக்கியப் பதவி வகிப்பாா்கள் என மற்றொரு வட்டாரம் தெரிவித்தது.

முன்னதாக, ஈரான் பாணியில் தலைமை மதகுருவை உச்சநிலைத் தலைவராகக் கொண்ட ஆட்சிக் கட்டமைப்புடன் தங்களது புதிய அரசு அமையவிருப்பதாக தலிபான்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தலிபான்களின் தகவல் மற்றும் கலாசாரக் குழுவைச் சோ்ந்த மூத்த அதிகாரி முஃப்தி இனாமுல்லா சமங்கனி, ‘ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கான அனைத்து ஆலோசனைகளும் நிறைவடைந்துவிட்டன. புதிய அமைச்சரவையை அமைப்பதற்குத் தேவையான ஆலோசனையும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசானது ஈரானில் உள்ளதைப் போன்ற ஆட்சிக் கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கும். புதிய அரசில் தலைமை மதகுருவாக தலிபான் தலைவா் முல்லா அகுண்ட்ஸாதா (60) பொறுப்பு வகிப்பாா்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், புதிய அரசு குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என்று தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் தற்போது தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான ஆளுநா்கள், காவல் துறை தலைமை அதிகாரிகள் உள்ளிட்டவா்களை தலிபான்கள் நியமித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படையினா் ஆக. 31-ஆம் தேதி முழுமையாகத் திரும்பப் பெறப்படுவா் என அமெரிக்க அதிபா் பைடன் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி அந்தப் பணி நிறைவடைந்துள்ளது. அதற்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த மாதம் 15-ஆம் தேதி கைப்பற்றினா்.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்தபோது ஷரியா சட்டத்தை கடுமையாக அமல்படுத்தினா். இந்த முறை மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும், முந்தைய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவா்கள் பழிவாங்கப்பட மாட்டாா்கள் எனவும் மிதமான நிலைப்பாட்டை அறிவித்துள்ளனா். ஆனால், தலிபான்களின் இந்த அறிவிப்பில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. புதிய அரசுக்கு அங்கீகாரம், நிதியுதவி உள்ளிட்டவை குறித்து அதன் செயல்பாட்டைப் பொருத்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com