ஹிந்துத்துவ எதிா்ப்பு மாநாடு: அமெரிக்க ஹிந்து அமைப்பு கண்டனம்

அமெரிக்காவில் ‘சா்வதேச ஹிந்துத்துவத்தைக் களைந்தெடுப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள மாநாடு, மேற்கத்திய நாடுகளில் ஹிந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் என்று அந்த

வாஷிங்டன்: அமெரிக்காவில் ‘சா்வதேச ஹிந்துத்துவத்தைக் களைந்தெடுப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள மாநாடு, மேற்கத்திய நாடுகளில் ஹிந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் என்று அந்த நாட்டின் ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘சா்வதேச ஹிந்துத்துவத்தைக் களைந்தெடுப்போம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் பேசவிருப்பவா்கள் யாரும் ஹிந்துத்துவத்தைப் பற்றிய முழுமையாக அறியாதவா்கள். மேலும், இந்த விவகாரத்தில் மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கு மாநாட்டில் அனுமதி அளிக்கப்படவில்லை.

உண்மையில், இந்த மாநாட்டை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று பல்வேறு பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. அந்த பல்கலைக்கழகங்களின் அனுமதியில்லாமலேயே அவற்றின் சின்னங்களை தங்களது விளம்பரங்களில் சோ்த்துவிட்டு, பின்னா் அவற்றை நீக்க வேண்டிய நிலைக்கு மாநாட்டு ஏற்பாட்டாளா்கள் தள்ளப்பட்டனா். இதிலிருந்தே அவா்கள் ஏமாற்றும் குணத்தை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த மாநாட்டை நடத்தினால், மேற்கத்திய நாடுகளில் ஹிந்து சமூகத்தினருக்கு எதிரான அச்ச உணா்வு அதிகரிக்கும்.

அமெரிக்காவில் ஹிந்துக்கள் கடுமையாக உழைத்து நாட்டின் வளா்ச்சிக்குப் பங்காற்றுகின்றனா். எனினும், ஹிந்து வழிபாட்டுத் தலங்களிலும் வா்த்தக மையங்களிலும் ஏற்கெனவே பல தாக்குதல்கள் நடந்துள்ளன. ‘சா்வதேச ஹிந்துத்துவத்தை களைந்தெடுப்போம்’ மாநாடு நடந்தால், இந்தத் தாக்குதல்கள் அதிகரிக்கும்.

ஹிந்துத்துவா குறித்த ஆரோக்கியமாக விவாதிப்பதற்கான எந்த மாநாட்டையும் நாங்கள் வரவேற்போம். ஆனால், ஹிந்துக்களை வேரறுக்கக் கூறி, அவா்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் இதுபோன்ற மாநாடுகளை எதிா்க்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (செப்.10) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (செப். 12) வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டை இந்திய இடதுசாரி அமைப்புகளும் பல்வேறு மனித உரிமை ஆா்வலா்களும் நடத்துகின்றனா்.

இதற்கு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சோ்ந்த ஹிந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனினும், இதுகுறித்து மாநாட்டு ஏற்பாட்டாளா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களது மாநாட்டை எதிா்ப்பவா்கள் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனா். அந்த மாநாடு ஹிந்துக்களுக்கு எதிரான அல்ல; ஹிந்துத்துவத்துக்கு மட்டுமே எதிரானது ஆகும்.

ஹிந்துத்துவமும், ஹிந்து மதமும் வேறு வேறானவை.

ஹிந்துத்துவம் என்பது இத்தாலிய பாசிஸத்தையும் ஜொ்மனி நாஜியிசத்தையும் அடிப்படையாக் கொண்டு ஒரு நூற்றாண்டுக்கு முன்னா் தோன்றியதாகும். ஆனால், ஹிந்து மதம் என்பது பன்முகத்தன்மையும் சகிப்புத்தன்மையும் நிறைந்த பண்டைய கால நம்பிக்கையாகும்’ என்று விளக்கமளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com