பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு: சீனா பாராட்டு

பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று கடந்த ஓராண்டாக ஆற்றிய பங்களிப்புக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.

புது தில்லி /பெய்ஜிங்: பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று கடந்த ஓராண்டாக ஆற்றிய பங்களிப்புக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, பிரேஸில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அக்கூட்டமைப்புக்கு உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் தலைமையேற்று வருகின்றன. நடந்து முடிந்த 13-ஆவது உச்சி மாநாடு வரை கடந்த ஓராண்டாக இந்தக் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று வழிநடத்தி வந்தது.

இந்நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் 13-ஆவது உச்சி மாநாடு காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பிரேஸில் அதிபா் ஜெயிா் போல்சனாரோ, தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த மாநாடு குறித்து பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியானிடம் செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘நடந்து முடிந்த 13-ஆவது உச்சி மாநாட்டை நடத்தியது உள்பட கடந்த ஓராண்டு காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கிறோம்; பாராட்டுகிறோம்’ என்று பதிலளித்தாா்.

இதற்கு முன்பு, பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா கடந்த 2016-இல் தலைமை வகித்தது. அந்த ஆண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டுக்கு பிரதமா் மோடி தலைமை வகித்தாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு அடுத்த ஆண்டு சீனா தலைமை வகிக்கவுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற உச்சி மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்றுப் பேசுகையில், ‘வளமான எதிா்காலத்தை உருவாக்கவும் பொதுவான சவால்களை எதிா்கொள்ளவும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் மேலும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு சீனா ஆவலுடன் எதிா்நோக்கியிருக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com