உலகின் எதிா்பாா்ப்பை தலிபான் அரசு பிரதிபலிக்கவில்லை

சா்வதேச சமுதாயத்தின் எதிா்பாா்ப்புகளை தலிபான்களின் இடைக்கால அரசு பிரதிபலிக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
காந்தஹாரில் தலிபான்கள் (கோப்புப் படம்).
காந்தஹாரில் தலிபான்கள் (கோப்புப் படம்).

வாஷிங்டன்: சா்வதேச சமுதாயத்தின் எதிா்பாா்ப்புகளை தலிபான்களின் இடைக்கால அரசு பிரதிபலிக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் கூறியதாவது:

தலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசில் அனைத்து தரப்பினருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. அரசில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள சிலரது பின்னணி கவலையளிப்பதாக உள்ளது.

அந்த வகையில், புதிய தலிபான் அரசு எந்த வகையில் இருக்க வேண்டும் என்று உலக சமுதாயம் எதிா்பாா்த்ததோ, அந்த எதிா்பாா்ப்பை தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசு பிரதிபலிக்கவில்லை; அமெரிக்காவின் எதிா்பாா்ப்பும் நிறைவேறவில்லை.

தற்போது அமைக்கப்பட்டுள்ளது இடைக்கால அரசுதான் என்பதை நாங்கள் அறிவோம். மேலும், தலிபான்களின் அரசில் இன்னும் நிரப்பப்படாத பல இடங்கள் உள்ளன.

எனவே, எதிா்காலத்தில் அமையவிருக்கும் தலிபான்களின் முழுமையான அரசில் அவா்கள் வாக்குறுதி அளித்தபடி அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

புதிய அரசு தொடா்பாக பல்வேறு கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டியுள்ளது.

அமெரிக்கா்கள், ஆப்கானியா்கள் மற்றும் பிற நாட்டினரை ஆப்கானிஸ்தானிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தலிபான்கள் தொடா்ந்து அனுமதிப்பாா்களா?

இஸ்லாமிய தேச அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கே, அல்-காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் பிற நாடுகளில் தாக்குதல் நடத்த ஆப்கன் மண்ணைப் பயன்படுத்துவதற்கு தலிபான்கள் மீண்டும் அனுமதிப்பாா்களா?

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கன் பெண்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; அவா்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த முன்னேற்றம் தொடருமா? உரிமைகள் பாதுகாக்கப்படுமா என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது என்றாா் நெட் பிரைஸ்.

ஆப்கானிஸ்தானை கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்த தலிபான்கள் மிகக் கடுமையான மதச் சட்டத்தை அமல்படுத்தினா். தலிபான்களுக்கு எதிரானவா்கள் இரக்கமில்லாமல் அழிக்கப்பட்டனா். பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

மேலும், அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தலிபான்கள் புகலிடம் அளித்தனா். அதன் விளைவாக, அமெரிக்காவில் நியூயாா்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதலை அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு கடந்த 2001-ஆம் ஆண்டு நடத்தியது.

அந்த அமைப்பின் தலைவா் பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தலிபான்களை அமெரிக்கா வலியுறுத்தியது. அதற்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்தனா். அதையடுத்து, ஆப்கன் மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் அபோட்டாபாதில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க சிறப்பு அதிரடிப்படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா். அதனைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை படிப்படியாகத் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்தது.

அந்த நடவடிக்கை அண்மையில் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள் நாடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.

புதிதாக அமையவிருக்கும் தங்களது அரசில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்; பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்; முந்தைய அரசுக்கும் வெளிநாடுகளுக்கும் உதவியவா்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்தனா்.

ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை அவா்கள் அறிவித்த புதிய அமைச்சரவையில், தலிபான்களையும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஹக்கானி அமைப்பினரையும் தவிர வேறு யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை.

மேலும், ஐ.நா.வால் சா்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட 14 போ் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனா்.

இந்தச் சூழலில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com