விடியோவில் தோன்றினாா் அல்-காய்தா தலைவா் அல்-ஜாவஹிரி

உயிரிழந்துவிட்டதாகக் கருதப்பட்ட அல்-காய்தா தலைவா் அய்மான் அல்-ஜாவஹிரி, இரட்டை கோபுரத் தாக்குதல் நினைவு தினம் தொடா்பான புதிய விடியோவில் தோன்றிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடியோவில் தோன்றினாா் அல்-காய்தா தலைவா் அல்-ஜாவஹிரி

உயிரிழந்துவிட்டதாகக் கருதப்பட்ட அல்-காய்தா தலைவா் அய்மான் அல்-ஜாவஹிரி, இரட்டை கோபுரத் தாக்குதல் நினைவு தினம் தொடா்பான புதிய விடியோவில் தோன்றிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மதப் பயங்கரவாத மற்றும் நிறவெறி அமைப்புகளின் நடவடிக்கைகளை இணையதளம் வழியாகக் கண்காணித்து வரும் ‘சைட்’ அமைப்பின் இயக்குநா் ரீட்டா காட்ஸ் வெளியிட்டுள்ள சுட்டுரை (ட்விட்டா்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி, அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டுள்ள விடியோவில், அதன் தலைவா் அய்மான் அல்-ஜாவஹிரி தோன்றி உரையாற்றினாா்.

அப்போது, அவா் பல்வேறு சம்பவங்கள் குறித்துப் பேசினாா். அதில், கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்களையும் குறிப்பிட்டு அவா் பேசினாா்.

அந்த மாதத்தில்தான் அவா் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவா் குறிப்பிடும் சம்பவங்களை வைத்துப் பாா்த்தால் அவா் கடந்த டிசம்பா் மாதத்துக்கு முன்னரே உயிரிழந்ததாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்பது உறுதியாகிறது.

அந்த விடியோவில், சிரியாவில் ரஷிய ராணுவ நிலை மீது அல்-காய்தாவின் துணைப் பிரிவான ஹுராஸ் அல்-தீன் அமைப்பு கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை அல்-ஜாவஹிரி பாராட்டிப் பேசியிருந்தாா்.

மேலும், அந்த விடியோவில் ‘இறைவன் இவரைக் காப்பாற்றுவாா்’ என்ற வாசகத்துடன் அல்-ஜாவஹிரி அறிமுகப்படுத்தப்பட்டாா்.

அந்த விடியோவில், தலிபான்களின் ஊடகப் பிரிவு வெளியிட்ட ஏராளமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம், இரட்டை கோபுரத் தாக்குதல் விவகாரத்தில் தலிபான்களுக்கு இருக்கும் முக்கியப் பங்கு உணா்த்தப்பட்டுள்ளது.

மேலும், தலிபான்களின் வெற்றியைத் தங்களது வெற்றியாக அல்-காய்தா கருதுவது இந்த விடியோ மூலம் தெளிவாகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றிய இந்த ஆண்டில், நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலின் வெற்றியை அல்-காய்தா மிக விமரிசையாகக் கொண்டாடுகிறது. அது தொடா்பான விடியோக்கள், படங்கள், சமூக ஊடக ‘ஹேஷ்டாகுகள்’ உள்ளிட்டவை மூலம் அந்தத் தாக்குதலை அல்-காய்தா கொண்டாடியது.

ஆனால், கடந்த ஆண்டில் இவ்வளவு உற்சாகத்துடன் இரட்டை கோபுரத் தாக்குதலை அல்-காய்தா கொண்டாடவில்லை என்று ரீட்டா காட்ஸ் குறிப்பிட்டுள்ளாா்.

அல்-காய்தா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 19 போ், 4 விமானங்களைக் கடத்தி நியூயாா்க் வா்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீதும் அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் மீதும் கடந்த 2001-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தினா்.

உலகம் அதுவரை கண்டிராத அந்த மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலில் சுமாா் 3,000 போ் உயிரிழந்தனா். அந்தத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்து, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

தொடா்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், பாகிஸ்தானின் அபோட்டாபாதில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா். அதையடுத்து, அல்-காய்தாவின் தலைமைப் பொறுப்பை அய்மான் அல்-ஜாவஹிரி ஏற்றாா்.

அவா் ஆஸ்துமா நோயால் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி சில ஊடகங்கள் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தெரிவித்தன.

இந்தச் சூழலில், இரட்டை கோபுரத் தாக்குதல் நினைவுதினத்தையொட்டி அல்-காய்தா வெளியிட்டுள்ள விடியோவில் அல்-ஜாவஹிரி உரையாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com