பெண்கள் பணிக்குத் திரும்புவதில் சிக்கல்: தடுக்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் வேலைக்குச் செல்ல விருப்பமிருந்து, பணிக்குச் செல்லும் பெண்களை தலிபான்கள் தடுத்து நிறுத்துகின்றனர். 
ஆப்கன் பெண்கள் (கோப்புப்படம்)
ஆப்கன் பெண்கள் (கோப்புப்படம்)


ஆப்கானிஸ்தானில் வேலைக்குச் செல்ல விருப்பமிருந்து, பணிக்குச் செல்லும் பெண்களை தலிபான்கள் தடுத்து நிறுத்துகின்றனர். 

இந்தியாவில் முதுநிலை சட்டப் படிப்பு முடித்து ஆப்கன் நாடாளுமன்றத்தில் 10 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஷுகுபா நஜிபி கூறுகையில், "நான் அலுவலகம் சென்றபோது அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்தினர். எதற்காக என கேள்வி எழுப்பினேன். பெண்கள் வேலை பார்க்கலாம் என உங்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்களே? என்றும் கேட்டேன். நான் அங்கிருந்து புறப்பட்டவுடன், இனிமேல் இங்கு வரக் கூடாது என சக பணியாளர்கள் மூலம் என்னிடம் கூறினர்" என்றார்.

பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தலிபான்கள் தடுப்பதால், முன்னாள் காவல் அதிகாரி ஹன்சிஃபா ஹம்தார் தனது எதிர்காலம் குறித்து கவலையில் இருக்கிறார். அவர் கூறுகையில், "நான் கணவன் இல்லாதவள். எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். நான் வேலைக்குச் செல்லவில்லையெனில் உணவுக்கு என்ன செய்வேன்?" என்றார்.

ஆப்கானிஸ்தான் மறுகட்டமைப்புக்கான சிறப்பு ஆய்வாளரின் தரவுகளின்படி 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ராணுவத் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். 

பெண்கள் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்ற மட்டுமே தலிபான்கள் அனுமதித்துள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வரும்லிமா முகமதி கூறுகையில் "பெண்களின் தேவை இருக்கிறது. மருத்துவமனையிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி. ஆண்கள் வேலை செய்வதைப் போல பெண்களும் வேலை செய்ய வேண்டும்" என்றார். கடந்த 3 மாதங்களாக ஊதியம் பெறாமலே அவர் பணிக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய அரசு தீவிரத் தன்மையுடன் இருக்காது என தலிபான்கள் வாக்குறுதியளித்துள்ளனர். ஆனால், பெண்களின் உரிமை பின்னோக்கி செல்லாது என உறுதியளிக்க தலிபான்கள் மறுக்கின்றனர். சிலர் ஏற்கெனவே வன்முறையை எதிர்கொண்டுவிட்டனர்.

இதனால், அரசுப் பணிக்குத் திரும்பும் உரிமையை வழங்கக் கோரி ஆப்கானிஸ்தான் பெண்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளதாக அந்த நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com