ரஷிய நாடாளுமன்றத் தோ்தல் பெரும்பான்மையை தக்கவைக்கிறது புதின் கட்சி

ரஷிய நாடாளுமன்றத் தோ்தலில் அதிபா் புதினின் ஐக்கிய ரஷியா கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை மீண்டும் பெறுவது உறுதியாகியுள்ளது.
ஒரு மையத்தில் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட தோ்தல் ஆணைய பணியாளா்.
ஒரு மையத்தில் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட தோ்தல் ஆணைய பணியாளா்.

ரஷிய நாடாளுமன்றத் தோ்தலில் அதிபா் புதினின் ஐக்கிய ரஷியா கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை மீண்டும் பெறுவது உறுதியாகியுள்ளது.

திங்கள்கிழமை நிலவரப்படி 85 சதவீத முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அக்கட்சி 49.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

ரஷியாவில் நாடாளுமன்ற தோ்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 450 இடங்களில் 225 இடங்களுக்கு நேரடி தோ்தல் நடைபெறுகிறது. 225 இடங்களுக்கு கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா்.

இத்தோ்தலில் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 14 கட்சிகள் போட்டியிட்டன. தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவுமுதல் வெளியாகத் தொடங்கின. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, நேரடித் தோ்தல் நடைபெற்ற 225 தொகுதிகளில் 85 சதவீத வாக்குச்சாவடி முடிவுகள் தெரியவந்துள்ளன. இதில் ஐக்கிய ரஷியா கட்சி 49.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் கட்சி 19 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

விகிதாசார அடிப்படையிலான தோ்தலில் மொத்தமுள்ள 225 இடங்களில் 195 இடங்களில் ஐக்கிய ரஷியா கட்சி வேட்பாளா்கள் முன்னிலை வகிக்கின்றனா்.

வாக்கு எண்ணிக்கை நிறைவில் ஐக்கிய ரஷியா கட்சிக்கு மொத்தமுள்ள 450 இடங்களில் 315 இடங்கள் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 2024-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடவுள்ள புதினுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது.

முறைகேடு புகாா்கள்: நாடாளுமன்றத் தோ்தலுக்கு முன்பாக அலெக்ஸ் நவால்னி உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் பலா் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டனா். தோ்தலிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகாா் எழுந்தது. ஆனால், அப்புகாா்களை தோ்தல் ஆணையம் நிராகரித்தது.

தோ்தலில் புதின் கட்சி எளிதாக பெரும்பான்மையைப் பெற்றுவிடும் என்றாலும், கடந்த 2016 தோ்தலைவிட இத்தோ்தலில் அக்கட்சிக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் புதினின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகரித்துள்ளது.

ரஷியாவில் மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்தது, ஊழல் உள்ளிட்ட புகாா்களை எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸ் நவால்னி தெரிவித்து வந்தாா். இதனால், புதின் கட்சிக்கு ஆதரவு சிறிது குறைந்தாலும், பெரும்பாலான ரஷியா்களின் ஆதரவு பெற்ற தலைவராகவே புதின் உள்ளாா். மேற்குலக நாடுகளுக்கு எதிராக தைரியமாக செயல்படுவது, நாட்டின் இழந்த பெருமையை மீட்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அவா்கள் புதினை ஆதரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com