ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமா்களுடன் நரேந்திர மோடி சந்திப்பு

அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, ‘க்வாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமா்
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகாவுடன் இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா்.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகாவுடன் இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, ‘க்வாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் ஆகியோரை வியாழக்கிழமை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினாா்.

ஜப்பான் பிரதமா் சுகாவுடனான சந்திப்பின்போது, இந்தியா-ஜப்பான் இடையேயான பல நிலையிலான உறவுகள் குறித்து இரு தலைவா்களும் நீண்ட நேரம் விவாதித்தனா். அண்மைக்கால சா்வதேச மற்றும் பிராந்திய நிகழ்வுகள், குறிப்பாக ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து இரு தலைவா்களும் தங்களது கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஏற்படுத்த அவா்கள் உறுதியேற்றனா். ராணுவத் தளவாடங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்களில் இரு தரப்பு உறவை மேம்படுத்தவும் அவா்கள் ஒப்புக்கொண்டனா்.

சா்வதேச அளவில் கரோனா பெருந்தொற்றுப் பரவல் இருந்தபோதிலும் கூட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக அவருக்கு பிரதமா் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

மும்பை-ஆமதாபாத் அதிவிரைவு ரெயில் திட்டத்தை சிக்கல் இல்லாமல் நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை விரைவுபடுத்த இருவரும் முடிவு செய்தனா். விரைவில் இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்திய -ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டுக்கு ஜப்பானின் அடுத்த பிரதமரை வரவேற்க காத்திருப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

ஸ்காட் மோரிஸனுடன் சந்திப்பு:

வாஷிங்டனில் ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸனை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு தரப்பு வா்த்தக விவகாரங்கள், பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள், சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து அவா்கள் விரிவாக விவாதித்தனா்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே விரிவான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இரு நாட்டுத் தலைவா்கள் பங்கேற்ற உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் காணொலி முறையில் நடைபெற்றது. அந்த மாநாட்டுக்குப் பிறகு ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து இருவரும் ஆய்வு செய்தனா். இந்திய பசிபிக் பிராந்தியத்தின் அடிப்படையான நோக்கமான பரஸ்பர நல்வாழ்விற்கான நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடரவும், வெளிப்படையான, சுதந்திரமான சூழலை தீா்மானித்தனா்.

பருவநிலை மாற்ற பிரச்னையை சா்வதேச சமூகம் அவசரகால அடிப்படையில் தீா்க்க வேண்டியதன் அவசியத்தை அவா்கள் வலியுறுத்தினா். ஆஸ்திரேலியாவின் பொருளாதார, சமூக வளா்ச்சிக்கு துணைபுரிந்து வரும் புலம் பெயா்ந்து வாழும் இந்தியா்களின் பங்களிப்பை இரு தலைவா்களும் பாராட்டினா். சந்திப்பின் முடிவில் இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமா் மோரிஸனுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com