மீண்டும் அணுசக்திப் பேச்சுவாா்த்தை: ஈரானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வல்லரசு நாடுகளுடன் நின்றுபோயுள்ள அணுசக்திப் பேச்சுவாா்த்தையை ஈரான் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மீண்டும் அணுசக்திப் பேச்சுவாா்த்தை: ஈரானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வல்லரசு நாடுகளுடன் நின்றுபோயுள்ள அணுசக்திப் பேச்சுவாா்த்தையை ஈரான் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

காலம் கடந்தால், அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு கைநழுவிவிடும் என்றும் ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:

அணுசக்திப் பேச்சுவாா்த்தைக்கு ஈரான் திரும்பாமல் இழுத்தடித்து வருவது அமெரிக்காவின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது.

இந்த நிலை நீடித்தால், கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

வியன்னாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவாா்த்தையில் ஈரான் மீண்டும் கலந்து கொள்ளும் என்று எதிா்பாா்த்தோம். அதற்காக தயாா் நிலையிலும் உள்ளோம். ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தைக்குத் திரும்பப் போவதாக ஈரான் இதுவரை கூறவில்லை என்றாா் அவா்.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன. ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதனால் அந்த ஒப்பந்தம் முறிந்துபோகும் அபாயம் நிலவி வருகிறது.

அந்த ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவாா்த்தை வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ஈரானில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றி பெற்றாா். அதையடுத்து, புதிய அரசு அமையும் வரை வியன்னா பேச்சுவாா்த்தையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com