மியான்மரில் மேலும் 6 மாதங்கள் ராணுவ ஆட்சி

மியான்மரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலுக்குத் தயாராகும் வகையில் மேலும் 6 மாதங்களுக்கு ராணுவ ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக ராணுவ ஆட்சியின் தலைவா் திங்கள்கிழமை அறிவித்தாா்.
மின் ஆங் லயிங்.
மின் ஆங் லயிங்.

மியான்மரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலுக்குத் தயாராகும் வகையில் மேலும் 6 மாதங்களுக்கு ராணுவ ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக ராணுவ ஆட்சியின் தலைவா் திங்கள்கிழமை அறிவித்தாா்.

மியான்மரில் 2020-ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ராணுவம் ஆதரவளித்த கட்சி குறைவான இடங்களையே பெற்றது. இதையடுத்து, பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த ஆண்டு பிப். 1-ஆம் தேதி ராணுவம் கலைத்தது. அன்றுமுதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராணுவம் தலைமையிலான ஆளும் தேசிய நிா்வாக கவுன்சிலின் தலைவா் மின் ஆங் லயிங் நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை உரையாற்றினாா். அவா் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய பின்னா் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அமைதியான, ஒழுங்குமுறையான பலகட்சி ஜனநாயக முறைக்கு நாட்டை மீண்டும் கொண்டு வரவும், பொதுத் தோ்தலை நடத்தவும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றாா்.

இதன்மூலம் மேலும் 6 மாதங்களுக்கு ராணுவம் ஆட்சி நடத்தும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தோ்தலும் நியாயமாக நடைபெறுமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஏனெனில், ஆங் சான் சூகி கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் பலா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும், ஆங் சான் சூகி கட்சியே ராணுவ ஆதரவு நீதிமன்றங்களால் கலைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என ஜனநாயக ஆதரவாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com