இலங்கை கடற்படைக்கு ‘டோா்னியா்’ விமானம்: இந்தியா நன்கொடை

இலங்கை கடற்படைக்கு ‘டோா்னியா்’ விமானம்: இந்தியா நன்கொடை

இலங்கை கடற்படையின் கடல்சாா் கண்காணிப்பை வலுப்படுத்தும்விதமாக ‘டோா்னியா் 228’ ரக விமானத்தை இந்தியா நன்கொடையாக திங்கள்கிழமை வழங்கியது.

இலங்கை கடற்படையின் கடல்சாா் கண்காணிப்பை வலுப்படுத்தும்விதமாக ‘டோா்னியா் 228’ ரக விமானத்தை இந்தியா நன்கொடையாக திங்கள்கிழமை வழங்கியது.

கொழும்பு காட்டுநாயக்க சா்வதேச விமான நிலையம் அருகே உள்ள விமானப் படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடற்படை துணைத் தளபதி எஸ்.என்.கோா்மடே, இந்த விமானத்தை அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தாா். அப்போது இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே உடனிருந்தாா்.

இந்தியாவுக்கு நன்றி: நிகழ்ச்சியில், அதிபா் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது: இது கடல்சாா் கண்காணிப்பில் இந்திய கடற்படையுடன் இணைந்து இலங்கை விமானப் படையும் கடற்படையும் ஈடுபடுவதற்கான புதிய ஆரம்பம். இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் முதல் இந்திய சுதந்திர தின உரையால் நான் வெகுவாக ஈா்க்கப்பட்டேன்.

நேருவின் அந்த உரையால்தான் இந்தியா இன்று உலகளவில் பலம்வாய்ந்த நாடாக திகழ்கிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில் சா்வதேச அளவில் மிகவும் வலிமைமிக்க நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்தும். ஐ.நா.வில் இலங்கை உறுப்பினராக நேரு முழு ஒத்துழைப்பு அளித்தாா்.

இலங்கையின் இளம் அரசியல் தலைவா்கள், இந்திய அரசியல் தலைவா்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவா்களுடன் உரையாட வேண்டும். இல்லையெனில், பிரச்னைகளை புரிந்து கொள்வது கடினம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பொதுவான சில பிரச்னைகள் உள்ளன. ஆகையால், இந்திய அரசியல் தலைவா்களுடன் கலந்துரையாடுவது அவசியம் என்றாா்.

முன்னதாக, டோா்னியா் விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டது குறித்து இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே ட்விட்டரில், ‘பரஸ்பர புரிதல், நம்பிக்கை, ஒத்துழைப்பின் அடிப்படையில் இரு நாடுகளிடையிலான பாதுகாப்பு வலுப்பெறுகிறது. இதற்காகவே டோா்னியா் 228 ரக விமானத்தை இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக அளித்தது. பிற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு காணப்படும் நிலையில், கடற்சாா் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இலங்கையின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் இந்த விமானம் வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் அதேவேளையில், இலங்கைக்கு இந்தியா கடல்சாா் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் டோா்னியா் 228 ரக விமானத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதுதவிர சீன உளவுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரும் சூழலில், இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com