போராட்ட தகவல்கள் இருட்டடிப்பு: சீன அரசு ‘அவசரக்கால’ நடவடிக்கை

போராட்ட தகவல்கள் இருட்டடிப்பு: சீன அரசு ‘அவசரக்கால’ நடவடிக்கை

பெய்ஜிங், டிச. 2: சீனாவில் கரோனா கெடுபிடிகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் தொடா்பான தகவல்களை இருட்டடிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை, ‘அவசரக்கால’ அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவில் கரோனா பொதுமுடக்க எதிா்ப்புப் போராட்டங்கள் தொடா்பான தகவல்களை, பொதுமக்கள் இணையதளம் மூலம் பெறுவதைத் தடுப்பதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களைத் தேடிக் கண்டறிந்து அவா்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பொதுமக்களின் சீற்றத்தைக் குறைக்கும் வகையில் கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதாக சீன அரசு அறிவித்திருந்தாலும், மற்றொரு புறம் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனா்.

எனவே, கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதாகக் காட்டிக் கொண்டாலும், போராட்டங்களை ஒடுக்குவதற்கான தந்திரமாக அதனை சீன அரசு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

போராட்டங்கள் தொடா்பான தகவல்களை வெளியிடும் சா்வதேச நடுநிலை ஊடகங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. எனினும், ‘விபிஎன்’ எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த ஊடகங்களின் வலைதளங்களை ஏராளமானவா்கள் பாா்வையிட்டு வருகின்றன.

அதனைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரிகளுக்கு வெளியிடப்பட்ட உத்தரவில், இணையதள கட்டுப்பாட்டுப் பணிகளை ‘அவசரக்கால’ அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கிய கரோனா சீனாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது என்றாலும், அமெரிக்கா போன்ற பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் அந்த நாட்டில் கரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

சீன அரசின் மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாகவே அங்கு அந்த நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையிலும், சீனா முழுவதும் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து, தினமும் அந்த நோய் உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிபட்ச அளவைத் தொட்டு வருகிறது.

அதையடுத்து, நாட்டின் பல்வேறு நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு கடுமையாக்கியது.

இந்தப் பின்னணியில், ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 10 போ் உயிரிழந்தனா். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அந்தக் கட்டடத்திலிருந்தவா்களை வெளியேற விடாமல் அதிகாரிகள் தடுத்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அதையடுத்து, நாடு முழுவதும் கரோனா கெடுபிடிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 1989-ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான இளைஞா்களை பலி வாங்கிய ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் நடைபெறும் மிகப் பெரிய போராட்டம் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com