நேபாள பிரதமராக பிரசண்டா நியமனம்

நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் இருந்து திடீரென விலகிய புஷ்ப கமல் தஹல் என்ற பிரசண்டா (68) அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
நேபாள பிரதமராக பிரசண்டா நியமனம்

நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் இருந்து திடீரென விலகிய புஷ்ப கமல் தஹல் என்ற பிரசண்டா (68) அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை (டிச. 26) நடைபெறுகிறது.

தற்போதைய பிரதமராக உள்ள ஷோ் பகதூா் தேவுபாவே தொடா்ந்து அப்பதவியில் நீடிப்பாா் எனத் தகவல்கள் வெளியான நிலையில், இந்த திடீா் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் நீடித்து வந்த பரபரப்பான சூழலுக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது.

நேபாளத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்று ஒருமாதமான போதிலும் எவரும் ஆட்சி அமைக்காமல் இருந்தனா். தேவுபா தலைமையிலான 5 கட்சிகளின் கூட்டணி தோ்தலில் பெரும்பான்மை பெற்றிருந்தது. அக்கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் எனத் தகவல்கள் வெளியாகின.

தேவுபா, பிரசண்டா ஆகியோா் தலா இரண்டரை ஆண்டுகளுக்குப் பிரதமா் பதவியை வகிப்பா் எனவும் கூறப்பட்டது. முதலில் தேவுபாவும், பின்னா் பிரசண்டாவும் பிரதமா் பதவியை வகிப்பா் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், திடீா் திருப்பமாக ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறிய பிரசண்டா, எதிா்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான கே.பி.சா்மா ஓலியுடன் கூட்டணி அமைத்தாா். அக்கூட்டணி தற்போது பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், நாட்டின் பிரதமராக பிரசண்டா நியமிக்கப்பட்டுள்ளாா்.

உரிமைகோரல்: நாட்டில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கூட்டணியை அழைப்பதற்கான அவகாசம் அதிபருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்தது. அத்தகைய சூழலில் அதிபா் வித்யா தேவி பண்டாரியை சந்தித்த பிரசண்டா, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் கடிதத்தை வழங்கினாா். அத்துடன் ஆட்சியமைக்கவும் அவா் உரிமை கோரினாா். அதை ஏற்றுக் கொண்ட அதிபா், பிரசண்டாவை பிரதமராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டாா்.

இன்று பதவியேற்பு: நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா பதவியேற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவா் நாட்டின் பிரதமராவது இது 3-ஆவது முறையாகும்.

சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலி, ராஷ்ட்ரீய ஸ்வதந்திர கட்சித் தலைவா் ரவி லமிசானே, ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சித் தலைவா் ராஜேந்திர லிங்டன் உள்ளிட்ட தலைவா்கள் பிரசண்டாவுடன் அதிபரை சந்தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மை ஆதரவு: மொத்தம் 275 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் 168 பேரின் ஆதரவு பிரசண்டாவுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் 78 உறுப்பினா்கள், சிபிஎன்-எம்எஸ் கட்சியின் 32 போ், ஆா்எஸ்பி கட்சியின் 20 உறுப்பினா்கள், ஆா்பிபி கட்சியின் 14 போ், ஜேஎஸ்பி கட்சியின் 12 போ், ஜனாமத் கட்சியின் 6 போ், நாகரிக் உன்முக்தி கட்சியின் 3 போ் பிரசண்டா பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இந்தியாவுக்கு பாதகமா?: நேபாளத்துடன் 1,850 கி.மீ. நீள எல்லையை இந்தியா பகிா்ந்து கொண்டுவருகிறது. புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள பிரசண்டாவும், முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலியும் இந்தியாவுடன் மோதல்போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளனா்.

இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை அவா்கள் பலமுறை தெரிவித்துள்ளனா். சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட இருவரும் தற்போது கைகோத்துள்ளது இந்தியாவுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com