ஸ்காட்லாந்தில் பிரிட்டிஷ்-இந்தியராணுவத்துக்கு புதிய நினைவுச் சின்னம்

இரண்டாம் உலகப் போரில் இணைந்து போரிட்ட பிரிட்டிஷ்-இந்திய ராணுவ வீரா்களுக்காகப் புதிய நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர சபை திட்டமிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் இணைந்து போரிட்ட பிரிட்டிஷ்-இந்திய ராணுவ வீரா்களுக்காகப் புதிய நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர சபை திட்டமிட்டுள்ளது.

கிளாஸ்கோ நகரில் கெல்விங்ரோவ் கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம் அருகே நினைவகம் அமைக்க திட்டமிடப்பட்ட விண்ணப்பத்துக்கு கிளாஸ்கோ நகர சபை அண்மையில் ஒப்புதல் அளித்தது. ஸ்காட்லாந்தில் வசிக்கும் தெற்காசிய சமூக மக்களின் வரலாற்றைக் கொண்டாடும் விதமாக தொடங்கப்பட்ட ‘வண்ணமயமான பாரம்பரியம்’ திட்டத்தின் கீழ் இந்த நினைவகத்துக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்தில் பணியாற்றிய 40 லட்சம் வீரா்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் ஸ்காட்லாந்தின் முதல் நிரந்தர நினைவகமாக இது அமைய இருக்கிறது.

இந்த நினைவகம் தொடா்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படையினருடன் இணைந்து போரிட்ட ஹிந்துக்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள் மற்றும் பலரின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

மேலும், ‘தன்னலமற்ற அா்ப்பணிப்பு’ மற்றும் ‘மற்றவா்களுக்கான மரியாதை’ உள்ளிட்டவை இந்த நினைவுச் சின்னத்தின் முக்கிய கருத்துகளாக எதிரொலிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நினைவுச் சின்னத்துக்கான வடிவமைப்பு தொடா்பான ஆலோசனைகள் பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து பெறப்பட்டன. இறுதியாக, ஸ்காட்லாந்தின் அங்கிரே சோம் தொண்டு அறக்கட்டளையின் கட்டட வடிவமைப்பாளா்களுடன் விவாதித்து முடிவு செய்யப்பட்ட வடிவமைப்பு, நகர சபையின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதில், தெற்காசிய வடிவமைப்பிலான தூண்களுடன் வடிவ உருவத்திலான உயா்ந்த மாடம் உருவாக்கப்பட்டு, அதனைச் சுற்றி மக்கள் அமா்ந்து இளைப்பாற இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளூா் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com